விளையாட்டு பிரிவில் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் முன்னிலை:இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவக்கம்

சென்னை:இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்பார்த்த, அண்ணா பல்கலை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. விளையாட்டுப் பிரிவில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மாணவர்கள், முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.


அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 539 இன்ஜி., கல்லுாரிகளில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.54 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான, கவுன்சிலிங் நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு துவங்கியது.

மொத்தம், 500 மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், 12 அரசுக் கல்லுாரிகளில், தலா ஒரு இடம் மற்றும், 488 தனியார் சுயநிதிக் கல்லுாரிகளில், தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசையில், முதல் இரண்டு இடங்களை, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பிடித்தனர்.

அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ., - சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் அஸ்வின், 171 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று, தரவரிசையில் முதலிடம் வந்தார்; இவர், அண்ணா பல்கலையின் கிண்டி பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்தார்.

இவர், 'ரோலர் ஸ்கேட்டிங்' விளையாட்டுப் பிரிவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் மற்றும் மாநில அளவில் தங்கம் என, மொத்தம், 80 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

ஆகாஷ் பி.சி.அய்யர் என்ற செஸ் விளையாட்டுப் பிரிவு மாணவர், இரண்டாமிடம் பெற்றார்; இவர், நங்கநல்லுார் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தவர்; 166.5 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று, அண்ணா பல்கலையின் கிண்டி பொறியியல் கல்லுாரியில், 'இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்' தேர்வு செய்தார்.

காமன்வெல்த் போட்டிகள், சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி போன்றவற்றில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.மூன்றாம் இடம் பிடித்த கிரிமன், கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்; இவர், அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரியில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் தேர்வு செய்தார். செஸ் விளையாட்டில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை, பல்கலை பதிவாளர் கணேசன், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை இயக்குனர் நாகராஜன் மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் வழங்கினர்.

அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்:விளையாட்டுப் பிரிவு கவுன்சிலிங்கில், முதல் மூன்று இடங்களில், ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் செஸ் பிரிவு மாணவர்கள் தேர்வாகினர். ஒலிம்பிக் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் பிரிவில், முக்தா மல்லாரெட்டி, என்ற மாணவி, ஐந்தாம் இடம் பிடித்து, அண்ணா பல்கலையிலுள்ள, 'ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் அன்ட் பிளானிங்' கல்லுாரியில், பி.ஆர்க்., எடுத்தார். இவர், சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தவர்.

முதல், 10 இடங்களில், ஒலிம்பிக் விளையாட்டான நீச்சல், துப்பாக்கி சுடுதல், டென்னிகாய்ட் என்ற வளைபந்து மற்றும் பென்சிங் என்ற வாள்வீச்சு பிரிவு மாணவ, மாணவியர் இடம் பெற்றனர். மற்ற ஆறு இடங்களில், தலா மூன்று பேர் ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் செஸ் பிரிவினர் பெற்றனர். முதல், 10 இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை.

சீட்டை திரும்ப கொடுத்த 500 மாணவர்கள்

அண்ணா பல்கலை யின் இன்ஜி., கவுன்சிலிங்கின் முதல் நாளான நேற்று, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான, 500 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில், 1,000 பேருக்கு, அண்ணா பல்கலை அழைப்பு விடுத்திருந்தது.

இவர்களுக்கு, நான்கு கட்டங்களாக, நேற்று ஒரே நாளில், இரவு 8:00 மணி வரை கவுன்சிலிங் நடந்தது. 1,000 பேர் பங்கேற்றாலும், 385 பேர் மட்டுமே ஒதுக்கீடு ஆணை பெற்றனர்; 500 பேர், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைத்தும், விரும்பிய கல்லுாரி கிடைக்கவில்லை என்பதால், 'சீட்' வேண்டாம் என, முன்வைப்புத் தொகையை திரும்பப் பெற்று விட்டனர். இவர்கள், பொது கவுன்சிலிங்கில் மீண்டும் பங்கேற்பர்.

இறுதியில், 500 இடங்களில், 115 இடங்கள் காலியாகி உள்ளன. இதை நிரப்புவதற்கு, 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், அடுத்த நிலையிலுள்ள, 600 பேருக்கு, மீண்டும் மற்றொரு நாள் கவுன்சிலிங் நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.