யோகா தினம் குறித்து எந்த உத்தரவும் அளிக்கவில்லை: சென்னை மாநகராட்சி தகவல்

யோகா தினம் குறித்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 
யோகா என்பது இந்து மதம் சார்ந்தது என்ற விமர்சனத்தால் யோகா தினக் கொண்டாட்டங்கள் சர்ச்சையாகி வருகின்றன. எனினும்
மத்திய அரசு யோகா தினத்தை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் யோகா தினம் கொண்டாட சி.பி.எஸ்.இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசிட மிருந்து யோகா தினம்கொண்டாடு வது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டால் அந்தந்த மாவட்டங்களில் யோகா தினம்கொண்டாடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனினும் 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள 284 மாநகராட்சிப் பள்ளிகளில் யோகா தினம் கொண்டாடுவதற்கான உத்தரவுகள் எதுவும் தரப்படவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “மாநகராட்சிப் பள்ளிகளில் யோகா தினம் கொண்டாடுவது தொடர்பாக மாநகராட்சியோ, தமிழக அரசோ எந்த உத்தரவும் அளிக்கவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏதாவது நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்”என்றார்.