ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து :தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் குளறுபடி

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு குளறுபடியை தொடர்ந்து, இன்ஜி., படிப்புக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதிலும், திடீர் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி நிறுவனங்களின் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
நடத்திய தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வில், வினாத்தாள் வெளியான புகாரைத் தொடர்ந்து, நுழைவுத்தேர்வை மீண்டும் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையை, 'ஜாய்ன்ட் சீட் அலொக்கேஷன் அதாரிட்டி' என்ற, ஒருங்கிணைந்த இட வழங்கல் ஆணையம் நடத்த, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதனால், முதன்முறையாக இந்த ஆண்டு முதல், இட வழங்கல் ஆணையம் சார்பில், கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த கவுன்சிலிங் பதிவுகள், நேற்று துவங்குவதாகஅறிவிக்கப்பட்டன.ஆனால், ஜே.இ.இ., மெயின் என்ற நுழைவுத்தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., தன் அகில இந்திய தரவரிசை பட்டியலை, நேற்று திட்டமிட்டபடி வெளியிடவில்லை. 
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ., தவிர, மற்ற மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களின், பிளஸ் 2 மதிப்பெண், இன்னும் சி.பி.எஸ்.இ.,க்கு வந்து சேரவில்லை. மாநிலத் தேர்வுத் துறைகளுக்கு பலமுறை தகவல் அளித்தும், பல மாநிலங்கள் தேர்வு முடிவுகளை இன்னும் தரவில்லை. எனவே, தரவரிசை பட்டியலை திட்டமிட்டபடி வெளியிட முடிய வில்லை. இதற்கு சி.பி.எஸ்.இ., பொறுப்பல்ல.இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், நேற்று துவங்க இருந்த ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.'மற்ற மாநிலங்களின், பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வந்து விட்டால், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனங்களின், கவுன்சிலிங் நடவடிக்கைகளுக்கான புதிய தேதி, இன்று அறிவிக்கப்படும் என்று, ஒருங்கிணைந்த இட வழங்கல் ஆணையம் அறிவித்துள்ளது.