பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவிப்பு
வெளியிட்டுள்ளனர். 2015-16 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பின்னர் 28-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 29-இல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது

.
 இந்த நிலையில், கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் பல்வேறு தகவல்களை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

 இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

 பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேருக்கு கடந்த 15-ஆம் தேதி சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்டது. அதனுடன் அவர்களுடைய விவரங்களும் வெளியிடப்பட்டது.

 வருகிற 19-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் தினம் முதல் கலந்தாய்வு அழைப்புக் கடிதங்கள் மாணவர்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டு விடும்
.
 விண்ணப்பத்தில் மாணவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இந்த அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்.

2 மணி நேரத்துக்கு முன் வரவேண்டும்: தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடனேயே, மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதி, நேரம் ஆகிய விவரங்களும் வெளியிடப்பட்டு விடும். அழைப்புக் கடிதத்திலும் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 இதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக, மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் வந்துவிடுவது அவசியம்.கலந்தாய்வு தொடங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படும். உடனடியாக விசாரணை மையத்தில் அழைப்புக் கடிதத்தைக் காண்பித்து, வங்கி ரசீதைப் பெற்று, வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கி மையங்களில் வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.

 எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ. 1,000 வைப்புத் தொகையையும், இதர பிரிவு மாணவர்கள் ரூ. 5,000 வைப்புத் தொகையையும் வங்கி மையத்தில் பணமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்த வேண்டும்.

 பின்னர் இந்த வங்கி மையத்தில் வழங்கப்படும் ரசீதுடன், விவரங்களை விவரிக்கும் அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அப்போது மாணவருடன், ஒரே ஒரு உறவினர் மட்டும் அனுமதிக்கப்படுவார்.
 பின்னர், அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குப் பிறகு இடங்களைத் தேர்வு செய்யும் அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அங்கு மாணவர்கள் விரைவாக இடங்களைத் தேர்வு செய்வது அவசியம்.

 முதலில் 3 விருப்ப இடங்கள் (சாய்ஸ்) தேர்வு செய்து, பின்னர் அவற்றிலிருந்து இறுதியாக ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து சம்மதம் தெரிவித்ததும், தேர்வு செய்த கல்லூரிக்கான சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டு விடும். அதன் பிறகு இடத்தை மாற்றுவது இயலாது.எனவே, கலந்தாய்வுக்கு வருவதற்கு முன்னரே மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து வைத்துக்கொள்வது அவசியம்.

 இடைத்தரகர்களுக்குத் தடை
 கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறக்கூடாது என்பதால், பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் கல்லூரி இடைத்தரகர் என்பது உறுதி செய்யப்பட்டால் போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவர். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 100 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவர்களில் 50 பேர் சீருடையிலும், 50 பேர் சாதாரண உடையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார் ரைமண்ட் உத்தரியராஜ்.
ஆயிரம் பேர் அமரக் கூடிய 6 அறைகள்
 மாணவர்களின் வசதிக்காக பல்கலைக்கழக வளாகத்திலும், எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகளில் எத்தனை இடங்கள் உள்ளன என்ற விவரங்கள் மிகப் பெரிய டிஜிட்டல் திரைகளில் வெளியிடப்படும். ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் இந்த டிஜிட்டல் திரையுடன் கூடிய 6 அறைகள் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் வெளியிடப்படும் விவரங்கள் நாள் ஒன்றுக்கு 8 முறை புதுப்பிக்கப்படும்.
ஜாதி சான்றிதழ் இணைக்காதவர்களுக்கு...
 மேலும், இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு பெற விண்ணப்பித்துள்ள சில மாணவர்கள் ஜாதிச் சான்றிதழை இணைக்கத் தவறியுள்ளனர். அவ்வாறு இணைக்கத் தவறியவர்கள் அனைவரும் இதரப் பிரிவினர் (ஓ.சி.) பட்டியலிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு பிரிவு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தங்களுடைய ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்கும் மாணவர்கள், அவர்களுடைய பிரிவின் கீழான இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவர். இல்லையெனில் ஓ.சி. பிரிவு மாணவராகவே அவர்கள் கருதப்படுவர்.
ஒரு பிரிவுக்கு 500-800 மாணவர்கள்
 கலந்தாய்வைப் பொருத்தவரை, ஒவ்வொரு நாளும் 8 பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். இம்முறை ஒரே தரவரிசையில் (ரேங்க்) அதிகபட்சம் 1,000 மாணவர்கள் வருவதால், ஒரு பிரிவுக்கு 500 முதல் 800 மாணவர்கள் வரை அழைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி நாள் ஒன்றுக்கு 6,500 பேர் வரை அழைக்க முடிவு செய்துள்ளோம்.
50 சதவீத பேருந்துப் பயணச் சலுகை...
 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வுக்கு வருபவர்களுக்காக தமிழக அரசு இரு வழி பேருந்துப் பயணச் சலுகை வழங்கி வருகிறது.
 இந்த பயணச் சலுகையில் பயணிக்க விரும்பும் மாணவர்கள் அசல் (ஒரிஜினல்) அழைப்புக் கடிதத்தை பேருந்து நடத்துநரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் அதன் நகல் ஒன்றை நடத்துநரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 இதன் மூலம், 50 சதவீத கட்டணச் சலுகையில் அவர்களுடைய ஊர்களிலிருந்து சென்னைக்கு வரமுடியும். கலந்தாய்வுக்கு வரும் மாணவருடன், மேலும் ஒருவர் இந்தச் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.
 இதனால், அனைவருக்கும் ஒரிஜினல் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுவிடும். கிடைக்கப் பெறாதவர்கள் அண்ணா பல்கலைக்கழக விசாரணை மையத்தைத் தொடர்பு
 கொள்ளலாம்.