அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளத
 
           சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  ஏழை மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையையும், மத்திய அரசு  கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறையையும் கொண்டு வந்தது.  அது வந்த  பிறகும்  தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இதுவரை இல்லை. ஏற்கனவே உள்ள பழைய சட்டம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் பள்ளிக்காக ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. எனவே, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று  அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பள்ளிகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மாணவர்கள் சேர்ககையின்போது பள்ளிகள் தன்னிச்சையாக செயல்படுகிறது. எனவே தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வகுத்து சட்டம் இயக்கவேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். 

 இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு,  ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி  கவுல், நீதிபதி புஷ்பாசத்தியநாராயணன்  ஆகியோர் முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது   பள்ளிக் கல்வித்துறை இணை செயலாளர் அழகேசன் சார்பாக அரசு சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டங்கள் கொண்டு வர உயர்நிலை குழு அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சட்டம், சமச்சீர் கல்விச் சட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவைகளை உள்ளடங்கியதாக இருக்கும். எனவே, இந்த உயர் நீதிமன்றம்  கால நிர்ணயம் செய்யும்பட்சத்தில், அந்த காலத்துக்குள் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பதில் மனுவில் கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல்கள் வி.செல்வராஜ், கே.பாலு ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அரசு அதை அமல்படுத்தவில்லை. எனவே கால கெடு நிர்ணயிக்கவேண்டும் என்றனர். உடனே தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த  சட்டம் கொண்டு வர எவ்வளவு கால கெடு தேவை என்று அரசிடம் கேட்டு பதில் அளிக்கிறேன் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் நாளைய தினம், கால கெடுவை அரசு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.