பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.

கோவை மாவட்டத்தில், சட்டம், நீதிமன்றம் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையால், நாளுக்கு நாள் அதிரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க முடியாமல், அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் திணறி வருகின்றனர்.பள்ளிக்கல்வித்துறையின் கீழ், ஆசிரியர் நியமனம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு, தகுதித்தேர்வு,
பணி முன்னுரிமை மற்றும் பொது நல வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தனியார் பள்ளி இடப்பிரச்னை, கலையாசிரியர்கள் தேர்வு என, ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படுகின்றன.இன்றைய சூழலில், மாநிலம் முழுவதும், 7,600 வழக்குகள்நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யவேண்டிய பதில்களை, கல்வி அலுவலக உதவியாளர்களே தயார் செய்து சமர்ப்பிக்கின்றனர்.சட்டம், நீதிமன்ற நுணுக்கங்களை அறியாத அலுவலக ஊழியர்கள்பதில்களை முறையாக தயாரிக்க இயலாததால், பல வழக்குகளில், பள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்புகள் வந்துள்ளன. பணி சுமைகளுக்கு மத்தியில் பதில்களை சமர்ப்பிக்க காலம் தாழ்த்தி வழக்குகள் முடிக்காமல் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.வழக்கு சார்ந்த பணிகளுக்கு லட்சக்கணக்கில் செலவினங் கள் ஏற்படுகிறது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை இதற்கான நிதியை ஒதுக்காததால், வேறு பிற நிதிகளை வழக்குகளை கையாள பயன்படுத்தவேண்டிய சூழல் மாவட்ட அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட மற்றும் தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் ஆகிய பிரிவுகளில், 350 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளை மட்டும் பொறுப்பேற்று நடந்த சட்ட ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களை மாவட்டந்தோறும் நியமிக்கவேண்டியது இன்றைய சூழலில் கட்டாயமாகியுள்ளது. பள்ளிகல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலத்தலைவர் பால்ராஜ் கூறுகையில், ''நிர்வாக ஊழியர்களுக்கு வழக்குகளை கையாள்வது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் சார்ந்த விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு அலைக்கழிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. 
மாவட்டந்தோறும் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படும் என அறிவித்து பல மாதங்கள் கடந்தும் பலனில்லை. வழக்குகள் தொடர்பாக, குறைந்த ஊதியம் வாங்கும் நிர்வாக ஊழியர்கள், தங்கள் சொந்த பணத்தைசெலவு செய்யும் அவலநிலை யில் உள்ளோம். இதற்கு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்,'' என்றார்.