அணு கதிர்வீச்சை கண்டறியும் நியூட்ரினோ!

அதே மாதிரி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள பெர்மி லேபிற்கு சென்றோம். அங்கு, MINOS (Main Injector Neutrino Oscillation Search) துகள் இயற்பியல் சோதனை திட்டத்தில், நியூட்ரினோவின் ஊசலாட்டத்தின் தன்மையை பற்றி ஆராய்ச்சி நடக்கிறது.

இந்த பெர்மி லேபில் உற்பத்தியாகும் நியூட்ரினோவை, இரண்டு கண்டுணர்வு கருவிகள் மூலம் கண்டறியப்படுகிறது. ஒன்று நியூட்ரினோ உற்பத்தியாகும் இடத்தில்; மற்றொன்று, 735 கி.மீ., துாரத்தில் மின்னசோட்டா மாநிலத்தில்.
நம்பிக்கை
பார்த்தால் நம்புவேன் என்பது பகுத்தறிவு, நம்பினால் தான் பார்க்க முடியும் என்பது விஞ்ஞான அறிவு. மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும், ஒரு தனிமனிதனது நம்பிக்கையின் விளைவாக, அவனது கற்பனைத் திறன் கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக விளைந்தது தான். எலக்ட்ரானை கண்டுபிடித்து என்ன பயன், அன்றைக்கு கேட்டிருந்தால், இன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும். துகள் அறிவியல் (particle physics) எனும் பிரிவைச் சார்ந்த ஆய்வின் தொடர்ச்சியாக தான் எலக்ட்ரான் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. எலக்ட்ரான் ஆய்வுக்கு பின் தான், அதை இயக்கி செயல்படும், கணினி முதல் கையடக்க செல்பேசி வரையிலான மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல இன்றைக்கு உலகம் முழுவதும், எத்துறையாக இருந்தாலும், எலக்ட்ரானிக் சாதனங்களால் இயக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
அது போல தான், போசிட்ரான் எனும் எதிர் -எலக்ட்ரானை (அண்டி மேட்டர் வகை சார்ந்த துகள்) பயன்படுத்தி தான், PET SCAN (positron emission tomograph) போன்ற உடல் முழுவதையும் சோதனை செய்து வியாதியை துல்லியமாக கண்டறியும் மருத்துவ கருவி உருவாக்கும் ஆய்வில்
ஈடுபட்டு வருகின்றனர்.
பெர்மிலேபில் உள்ள டேவத்ரோன் எனும் துகள் முடுக்கி உதவியுடன், டில்லி பல்கலைக் கழக விஞ்ஞானிகள் மற்றும் இந்திய மாணவி, மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும், PET ஸ்கேன் போல Proton Computed Tomography (PCT) Detector for Cancer Therapy என்ற நவீன மருத்துவ ஆய்வு கருவியை உருவாக்க, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி செய்துள்ளார் என்பது சிறப்பு. சரியான வாய்ப்பு கொடுத்தால், யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது.
ஆழ்கடல் ஏன் நில நிறமாக ஒளிர்கிறது என்று கேட்டார், சர் சி.வி.ராமன், அடிப்படை அறிவியலுக்கான ஆராய்ச்சி அது; அதனால் விளைந்தது ராமன் விளைவு. அதனால் இன்றைக்கு, மருந்துகளை பகுத்தறிய முடிகிறது; செமி -கன்டக்டர்களை, ஜெம்ஸ், கிரியா ஊக்கிகளை, கனிமங்களை, பாலிமர்களை மற்றும் பல்வேறு கனிமங்களின் வேதியியல், மற்றும் இயற்பியல்
தன்மைகளை கண்டறிய உதவுகிறது.
ராமன் விளவு
நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அனைந்து பொருட்களிலும், இந்த ஆராய்ச்சியின் பயன் தெரிகிறது. அது மட்டுமல்ல; இன்றைக்கு சகல அறிவியல் முன்னேற்றங்களுக்கும் காரணமாக இருக்கும் லேசர் தொழில்நுட்பவியலின் வளர்ச்சிக்கு காரணம், ராமன் விளவு தான்.
ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது என்ற கேள்வியை கேட்டதால் தான், நியூட்டனால் புவியீர்ப்பு சக்தி என்று ஒன்று இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிந்தது. நியூட்டன் முதலாவது விதிதான் இன்றைக்கு கார் மோதி விபத்து ஏற்படுமானால், காற்று பையின் உதவியுடன் உயிர்காக்க
உதவுகிறது.
இப்படி பல்வேறு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள் தான், இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்திற்கும் அதன் தொடர்ச்சியாக பயனுறு தொழிற்நுட்பத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
நியூட்டிரினோ ஆராய்ச்சி ஏன்? அதன் பயன்கள் என்ன?
இன்றைக்கு இருக்கும் ரேடியோ தொலைநோக்கி, காமா கதிர் தொலைநோக்கி, காணுறு ஒளி தொலைநோக்கி போன்ற தொலைநோக்கிகள் மூலம் கண்டு உணர்ந்து, ஆராய்ச்சி செய்து பிரபஞ்சத்தின் ரகசியங்களை நாம் அறிந்து கொள்கிறோம்; அதன் பயனாக அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குலத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறது. இதைப்போல, நியூட்ரினோ தொலைநோக்கிகள் இதுவரை கண்டு அறியப்படாத பிரபஞ்ச ரகசியங்களை மேலும் நுணுக்கமாக நமக்கு காட்டும் வாய்ப்பு இருக்கிறது.
3ஜி, 4ஜி வேண்டாம்
இன்றைக்கு நுண்ணலை, பண்பலை, லேசர் அலைகள் மூலம் தகவல் தொடர்பு பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வான்வெளியில் இருந்து சோலார் செயற்கைக்கோள் மூலம் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உருவாக்கி, அதை பூமிக்கு எந்த அலைகள் மூலம் கொண்டு வரலாம் என்ற ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செல் டவர் பக்கத்தில் இல்லை என்றால் அல்லது எதாவது மலை அடர்த்தியான கான்கிரீட் வீடு முதலியவை மறைத்தால், இன்றைக்கு நமது கைபேசியில் சிக்னல் இல்லை என்ற சிக்கல் எழுகிறது. '3ஜி' அலைவரிசை இன்னும் பல நகரங்களுக்கே வரவில்லை. '4ஜி' தொழில்நுட்பம் வந்துவிட்டது.
ஆனால், 4ஜி அலைவரிசை வந்திருக்கிறதா? இன்னும் நகரத்திற்கே வரவில்லை; கிராமத்திற்கு எப்படி வரும்? செல் அலைபேசிக்கு தேவையான தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், செல் டவர் அமைத்து, அலைபேசி சிக்னல் கிடைக்க, செல் டவர் மற்றும் அலை கடத்தி ஆன்டனா அமைக்க வேண்டும்.
எனவே, எல்லாவற்றையும் கடந்து செல்லும் தன்மை படைத்த நியூட்ரினோ, இயற்கையாகவே எங்கும் பாய்ந்து சென்று கொண்டிருகிறது. எனவே நியூட்ரினோ கொண்டு தகவல் பரிமாற்றம் செய்தால், சிக்னல் இல்லை என்ற பிரச்னையே இல்லாமல் செய்துவிடக் கூடும். எவ்வித ஆன்டனாவும் இல்லாமல், அண்டமெங்கும், பூமியெங்கும், பூமியை ஊடுருவி செல்லும் எவ்வித ஆபத்தும் இல்லா துகள் தான் நியூட்ரினோ.
இவ்வாறு, நியூட்ரினோ மூலம் தொழில்நுட்ப தகவல் தொடர்பு உருவாகினால் கடலுக்கு அடியில் செல்லும் நீர் மூழ்கிக் கப்பல் முதல், ஆழ் விண்வெளியில் பயணம் செய்யும் விண்கலம் வரை, தகவல் தொடர்பு மேம்படும். இந்த திசையில் யோசிக்கும் விதமாக, சமீபத்தில் சோதனை முயற்சியில் பாறையைக் கடந்து நியூட்ரினோ உதவியுடன் தகவல் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பெர்மி லேப் சார்ந்த விஞ்ஞானிகள், 2012ல் சோதனை முயற்சியாக, 240 மீட்டர் தடிமன் உள்ள அடர் பாறையின் வழி நியூட்ரினோ துகள்கள் உதவியுடன், சிறிய தகவலை செலுத்தி சாதனை செய்துள்ளனர். முதற்கட்ட சோதனையானாலும், மிக பிரகாசமான வாய்ப்புகள் தெரிகின்றன.
நியூட்ரினோ மூலம் அணு ஆயுதம் பரவுவதை தடுக்கவும், கதிரியக்க ஆபத்தை முன்கூட்டி அறிய உதவும் கருவி படைக்கவும் சாத்தியக்கூறு உள்ளது. நியூட்ரினோ உணர்வி, எங்கு கதிரியக்க ஆபத்து வந்தாலும், வரும் முன்னர் காட்டி விடும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளது.
புயலை முன்கூட்டி அறிய ராடார் பயன்படுத்துவதை போல, நியூட்ரினோ உணர்வி கொண்டு எளிதில் அணுக் கதிரியக்க கசிவை கண்டுபிடித்து விடலாம் என்று, அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக உலகில் நடந்து கொண்டிருக்கிறது.
பூகம்பத்தை அறியலாம்
மேலும் அணு ஆயுத பரவல் தடைச்சட்டம் சர்வதேச அளவில் வந்தால், எதிரி நாடு அதை முழுமையாக மேற்கொள்கிறதா என்ற சந்தேகம் இருக்கும். யாராவது அணு குண்டு வைத்திருந்தால், நியூட்ரினோ உணர்வி உதவியுடன், அதை இனம் காணலாம். எனவே உலக அமைதிக்கு வழி வகுக்கும் அணு ஆயுத பரவலை தடுக்கும் சக்தியாக, இந்த நியூட்ரினோ ஆராய்ச்சி விளங்கும்.
மேலும் பெட்ரோலியம் போன்ற கனிமங்களைக் கண்டறியவும், இந்த உணர்வி பயன் தரக்கூடும். அது மட்டுமல்ல; ஜியோநியூட்ரினோ மூலம் பூமிக்கடியில் ஏற்படும் பூமித்தட்டின் நகர்வு, அதனால் ஏற்படும் விளைவுகளை கண்டறிய நியூட்ரினோ டோமோகிராபி மூலம் வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் ஒரு வேளை பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் சாத்தியக்கூறுகளும் மிக பிரகாசமாக உண்டு.
இதைப்போன்ற பல பயனுறு தொழில்நுட்பம் உருவாகும் சாத்தியக்கூறு இருந்தாலும், தமிழகத்தில் அமைக்கப்படும் நியூட்ரினோ நோக்குக் கூடம், உள்ளபடியே அடிப்படை அறிவியல் ஆய்வு கூடம் தான். இங்கு, வளிமண்டல நியூட்ரினோவின் தன்மைகளை ஆராய்ந்து அடிப்படை அறிவியல் அறிவு செறிவு பெற, இந்திய விஞ்ஞானிகள் முயலுகின்றனர்.
நியூட்ரினோ என்றால் என்ன?
- நாளை பார்ப்போம்.
ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்
11வது இந்திய குடியரசுத் தலைவர்
[apj@abdulkalam.com]
வெ. பொன்ராஜ்
டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்
[vponraj@gmail.com]