எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: 'அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை இன்ஜி., படிப்புகளில் சேர, ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., -
எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., போன்ற முதுகலைப் படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத்தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியானது. நாளை முதல், 'ஆன் - லைனில்' மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதுகலை இன்ஜி., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதற்கு அண்ணா பல்கலையின் இணையதளம் மூலம், ஜூலை 4ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்கலாம்.
ஆன் - லைனில் பதிவு செய்யும் தகவல்களை பதிவிறக்கம் செய்து, வங்கி வரைவோலையுடன், 'தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை' என்ற முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை, https:/www.annauniv.edu/tanca2015/ இணைப்பில் பெறலாம்.