அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமே!

சென்னை:'அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு ஊழியர்களின், 2014 - 15க்கான, ஜி.பி.எப்., ஆண்டு அறிக்கை, தமிழக முதன்மை கணக்காயரின் நிர்வாக இணையதளத்தில், ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.கணக்கு இருப்பு போன்ற விவரங்களை, சந்தாதாரர்கள் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆண்டு கணக்கு அறிக்கையை, பதிவிறக்கமும் செய்யலாம். அதற்கு, சந்தாதாரர்கள் தங்களின் மொபைல் எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஜி.பி.எப்., ஆண்டு அறிக்கை, இனிமேல் அளிக்கப்படாது. கணக்கில் வித்தியாசம்; சந்தா தொகை விடுபட்டது; கடன்தொகை உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலமே அறிய முடியும்.
இதற்கு தொடர்பு கொள்ள, 044 - 2431 4477, 2434 2812 என்ற தொலைபேசி எண்கள், www.agae.tn.nic.in என்ற இணையதள முகவரி, aggpt@tn.nic.in என்ற இ - மெயில் முகவரி போன்றவற்றில் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு துறையின் ஊதியம் வழங்கும் அலுவலர்கள் அனைவரும், அவர்களின் தொலைபேசி, மொபைல் எண், இ - மெயில் முகவரி, அஞ்சல் முகவரி ஆகியவற்றை, 'துணை மாநில கணக்காயர் (நிதி 1), தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு - பண வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 0018' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த முகவரியில், சந்தாதாரர்களும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.