தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர் பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது. 
இந்த பண்டுகளில் முதலீட்டை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஆணையர் கே.கே.ஜலான் குறிப்பிடும்போது வருங்கால வைப்பு நிதியின் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியிலிருந்து 5 சதவீத தொகையை நடப்பாண்டில் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாகக் கூறினார். வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்புநிதி நடப்பாண்டில் ஒரு லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது. இதிலிருந்து ரூ.5000 கோடியை இடிஎப் திட்டங்களில் நடப்பாண்டில் முதலீடு செய்யப்படும் என்றார். வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 6 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு முன்பு மாநில அரசு மற்றும் மத்திய அரசு பத்திரங்களில் வைப்பு நிதி ஆணையம் முதலீடு களை மேற்கொண்டு வந்தது. தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய அனுமதியின்படி ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் அதிகபட்சம் 15 சதவீதம் வரையிலான தொகையை பங்கு மற்றும் பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதனடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியின் 5 சதவீதத்தை நடப்பாண்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். முதலீட்டு தேதி நிலவரப்படி ரூ.5,000 கோடிக்கும் குறைவான சந்தை மதிப்பை அந்த நிறுவனம் கொண்டிருக்க கூடாது. மேலும் செபியின் அனுமதி பெற்ற மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்யலாம். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தைகளில் குறைந்தபட்சம் 65% முதலீடுகளை செய்துள்ள பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.