இன்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர் அசத்தல்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, 23 பேரில் ஒருவர், அரசு பள்ளி மாணவர். எட்டு பேர், மருத்துவ தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளனர்.


அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங்குக்கான பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்டார். பட்டியலில், 23 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்துள்ளனர். இவர்களில், 15 பேரின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. 
*குமாரபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தொழிற்கல்வி மாணவர்களின் தர வரிசைப் பட்டியலில், இரண்டாம் இடம்; பிற்படுத்தப்பட்டோர் மாணவர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
 * தர வரிசையில், கோவை, சூலுாரைச் சேர்ந்த கீர்த்திபாலன், முதலிடம் பெற்றுள்ளார். இவர், திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளி மாணவர். *சாதனை நிகழ்த்திய நிஷாந்த் ராஜன், முகேஷ் கண்ணன், நிவாஷ், சரவணக்குமார், பிரவின்குமார், மோனிஷ், மோகன்குமார் மற்றும் ராம் அஸ்வந்த் ஆகிய எட்டு பேர் மருத்துவ தர வரிசை பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளனர்; மருத்துவம் படிக்க உள்ளனர். 
*அவினாசி வெள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கிரிதரன், ஈரோடு குருகுலம் பள்ளி மாணவர்.
 *ஈரோடு மாவட்டம் ஏலவாமலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன், திருச்செங்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகியோர், அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்.
 *மதுரை பி அண்ட் டி நகரைச் சேர்ந்த மாணவர் சுகைல் அகமது, 199.75 'கட் - ஆப்' எடுத்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனப் பிரிவிலும்; சேலம் ஆத்துாரைச் சேர்ந்த இசைப்பிரியா, 199.25 எடுத்து, ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவிலும்; கொல்லிமலையைச் சேர்ந்த தனசேகர், 197.50 எடுத்து, பழங்குடியினர் பிரிவிலும் முதலிடம் பெற்றுள்ளனர். *தொழிற்கல்விப் பிரிவில், கோவை காராமடையைச் சேர்ந்த மனோஜ், முதலிடம் பிடித்துள்ளார். ஈரோடு, சிக்கரசம் பாளையம் தினேஷ் குமார்; திண்டுக்கல்லைச் சேர்ந்த ரோகிந்த் போஸ் ஆகியோர் முறையே, மூன்று, நான்காம் இடங்களை பெற்றுள்ளனர். முழுமையான தர வரிசைப் பட்டியல், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
இன்ஜி., படிப்புக்கு மாணவியர் 'குட்பை': 
இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.50 லட்சம் பேரில், 57,990 பேர் மாணவியர். ஆனால், இந்த ஆண்டு தர வரிசைக்கான முதலிடம் பட்டியலில், மாணவியர் மிக சொற்பமாகவே இடம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு பிளஸ் 2வில், உயிரியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், அந்தப் பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது.அதனால், 'கட்- ஆப்' மதிப்பெண்ணும் குறைந்து விட்டது. கணிதம், பயாலஜி படித்த மாணவியரில், 195 முதல், 200 வரை, 'கட் - ஆப்' பெற்றவர்கள் மருத்துவம் நிச்சயம் கிடைக்கும் என்று அதற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதனால், இன்ஜினியரிங் பட்டியலில் அவர்கள் இடம் பெறவில்லை.அதேநேரம், இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில், 190க்குக் கீழ் அதிக மாணவர்கள், 'கட் - ஆப்' பெற்றுள்ளதால், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரித் தேர்வில் கடும் போட்டி இருக்கும்.இந்த ஆண்டு, 22,500 பேர், 190 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 21,280 பேர் பெற்றனர்.இந்த ஆண்டு, 28,129 பேர், 188 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 26,300 பேர் தான் பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.