ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும்: ரெயில்வேயின் புதிய திட்டம் அறிமுகம்

தவிர்க்க முடியாத சமயங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால், அந்த ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இனி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்து சேரும். இதற்கான வசதியை இந்திய ரெயில்வே தொடங்கி உள்ளது.


        முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு உதவுவதற்காக இந்த முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ரெயில் எங்கிருந்து புறப்படுகிறதோ அந்த ரெயில் நிலையத்தில் ஏறுவதற்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு மட்டுமே ஆரம்பத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது. பின்னர் இந்த சேவை மற்ற ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
       ரெயில்வே முன்பதிவு மையங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும்போதோ, ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கும்போதோ விண்ணப்பத்தில் குறிப்பிடும் செல்போன் எண்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. ரெயில்கள் ரத்து செய்வது முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதால், பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, இந்த வசதியை பயணிகள் பெற வேண்டுமானால், முன்பதிவு செய்யும்போது மறக்காமல் விண்ணப்பத்தில் செல்போன் எண்களை குறிப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.