அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனகடந்த 1962-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிகளில் இப்போது திருத்தங்கள் கொண்டு வந்துள்ளதாக சமூகப் பாதுகாப்புத்
துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் கடந்த 1962-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பின்பற்றி பிற ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்துமே மெட்ராஸ் முதியோர் ஓய்வூதிய விதிகள் 1962-ஐப் பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 இந்த விதிகளில் உள்ள நிபந்தனைகள் தற்காலத்துக்குப் பொருந்தாத சூழ்நிலையில், அவற்றில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பயனாளிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சமூகநலத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 ஓய்வூதியம் பெறுவதற்கான விதிகளில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையாளரிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றது. இந்தக் கோரிக்கையை ஏற்று எட்டு வகையான ஓய்வூதியத் திட்டங்களில் பயனாளிகளுக்கான தகுதிகள் திருத்தம் செய்யப்படுகின்றன. அதன் விவரங்கள்:
 இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்: இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் இருப்பதோடு, அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அதில் இப்போது செய்யப்பட்ட திருத்தத்தின் படி, அந்த பயனாளி ஆதரவற்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது.
 இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம்: வறுமைக் கோட்டுக் கீழ் இருந்து, 40 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் விதவைகள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்படிருந்தது. இப்போது அதில், பயனாளி யாரும் துணையில்லாத ஆதரவற்றவராக இருக்க வேண்டும் என்பது கூடுதலாக்கப்பட்டுள்ளது.
 இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்: வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்து, 18 வயது அல்லது அதற்கு மேல், 80 சதவீதம் மாற்றுத் திறனுடைய பயனாளி விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது, அதில் யாருடைய ஆதரவும் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
 ஆதரவற்ற மாற்றுத் திறனாளி ஓய்வூதியத் திட்டம்: ஆதரவற்ற, 18 வயது நிரம்பிய- அதற்கு மேலுள்ள, 60 சதவீதம் மாற்றுத் திறனுடைய, பணி செய்ய முடியாத மாற்றுத் திறனாளி விண்ணப்பிக்கலாம் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. அதில், இப்போது "பணி செய்ய முடியாத' என்ற விதி நீக்கப்பட்டுள்ளது.
 ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்: ஆதரவற்ற நிலையில், அதேசமயம் சட்டப்படியான வாரிசுகள் இருந்து, 18 வயது அல்லது அதற்கு மேல் வயதுடைய விதவைகள் விண்ணப்பிக்கலாம் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்டுள்ளது.
 முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்: ஆதரவற்ற, 60 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட, நிலமில்லாத விவசாய கூலிகளாக இருந்து, மகன் அல்லது மகளின் ஆதரவு இல்லாமல், கூலி வேலை செய்ய முடியாத பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்ற விதி இருந்தது. இப்போது, அந்த விதிகள் திருத்தப்பட்டு, ஆதரவற்ற, 60 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட, நிலமில்லாத விவசாயிகளாக இருக்கும் யாரும் விண்ணப்பிக்கலாம்.
 ஆதரவற்ற- கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்: ஆதரவற்ற நிலையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து சட்டப் படியாக விவாகரத்து பெற்று 5 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் இருந்து கணவனைப் பிரிந்ததற்கான சான்றிதழ் பெற்றவராக இருக்கும் பெண்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதி இப்போது நடைமுறையில் உள்ளது. அதில், கடைசி விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, விவாகரத்து பெற்று 5 ஆண்டுகள் அல்லது கணவனைப் பிரிந்ததற்கான சான்றிதழ் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் என திருத்தப்பட்டுள்ளது.
 திருமணமாகாத ஏழைப் பெண்கள் ஓய்வூதியம்: திருமணமாகாத, ஆதரவற்ற 50 வயதைக் கடந்த ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற விதியில் ஏழைப் பெண் என்ற வார்த்தை திருத்தப்பட்டு, 50 வயதைக் கடந்த பெண் என்று திருத்தப்பட்டுள்ளது.
 தமிழக அரசின் எட்டு ஓய்வூதியத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள் மூலம் அதிக அளவிலான பயனாளிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படும் என்று சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 நடைமுறைச் சிக்கல்களாக இருந்த விதிகள் இப்போது திருத்தப்பட்டு, அனைத்துப் பயனாளிகளுக்கும் ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.