அடுத்த ஆண்டு முதல் சுயநிதி பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கமிட்டி நிர்ணயம் செய்கிறது

தமிழ்நாட்டில் 13 ஆயிரம் சுயநிதி பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணியை நீதிபதி சிங்கார வேலு தலைமையிலான குழு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது.


நீதிபதி சிங்காரவேலு கமிட்டி

தமிழ்நாட்டில் நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரம் சுயநிதி பள்ளிகள் உள்ளன. பல பள்ளிகளில் மாணவர்களிடம் கல்விகட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்று தமிழக அரசிடம் புகார் வந்தது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கல்வி கட்டண சீரமைப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக அந்த கமிட்டியின் தலைவராக நீதிபதி சிங்காரவேலு உள்ளார். இந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் தொடர்பாக பெற்றோர்கள் இந்த கமிட்டியிடம் எழுத்து மூலம் புகார் அளித்து உள்ளனர்.

இந்த புகாரைத்தொடர்ந்து நீதிபதி சிங்காரவேலு, அந்த பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் முதல்வர், பெற்றோர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்துகிறார். விசாரணையில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரிந்தால் அந்த பள்ளிகளை எச்சரித்ததுடன் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப பெற்றோர்களிடம் ஒப்படைக்கும்படி பள்ளியின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு பள்ளியில் மட்டும் 80 லட்சத்திற்கும் மேல் கட்டணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது:-

கூடுதல் கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும்

சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளியில் கூடுதலாக வசூலித்த கல்வி கட்டணத்தை திரும்ப பெற்றோரிடம் 8 வாரத்திற்குள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல இப்போது சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்து உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இது போல கடந்த வருடமும், இந்த வருடமும் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். அந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

அப்போது, பல பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகள் வசூலித்த கூடுதல் கட்டணத்தை பெற்றோர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளன. எந்த ஒரு பள்ளியும் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.

இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார்.

13 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்

இந்த கமிட்டி ஏற்கனவே 13 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிதாக கல்வி கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அந்த கல்வி கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன்படி இந்த கட்டணம் 2016-ம் வருடம் ஏப்ரல் மாதம் வரை அமலில் இருக்கும். 2016 ஜூன் மாதம் முதல் புதிதாக கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவேண்டும்.

இதைத்தொடர்ந்து 13 ஆயிரம் சுயநிதி பள்ளிகளுக்கு புதிய கல்விகட்டணத்தை நிர்ணயிக்கும் பணியை நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கமிட்டி வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்கி மே மாதத்திற்குள் முடிக்க உள்ளது. பள்ளிக்கூட கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கமிட்டியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.