எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் நாளை வெளியாகிறது: தரவரிசைப் பட்டியல் தாமதம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கம் போல இந்த வருடமும் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடுமையான போட்டி ஏ
ற்படும் சூழல் உள்ளது.
       மருத்துவ படிப்பில் சேருவதற்கான 3 பாடங்களில் 200–க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கட்–ஆப் மதிப்பெண் 0.25 குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
         இதற்கிடையில் மறு மதிப்பீடு, மறு கூட்டல் போன்றவற்றிற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் ஒன்று அல்லது இரண்டு கூடினால் கட்–ஆப் மதிப்பெண் உயரும் என்ற நம்பிக்கையில் பல மாணவர்கள் உள்ளனர்.
மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் பெற விண்ணப்பித்துள்ள திருத்தப்பட்ட மதிப்பெண்களை தொகுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
ஒரு சில நாட்களில் இந்த பணி நிறைவடைந்து மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சி.டி.யை மருத்துவ கல்வி தேர்வுக் குழுவிற்கு தேர்வுத்துறை அதிகாரிகள் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் தரவரிசைப் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் தரவரிசைப் பட்டியல் 12–ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் ஓரிரு நாட்கள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மருத்துவ கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் 12–ந் தேதி வெளியிட வாய்ப்பு இல்லை. மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் திருத்தப்பட்ட சி.டி. நாளை (11–ந் தேதி) காலையில் தருவதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சி.டி. கிடைக்கப் பெற்ற பின்னர் ஓரிரு நாட்களில் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து விரைவாக தர வரிசைப் பட்டியலும் தயாராகிவிடும்’’ என்றார்.
இதே போல என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே அறிவித்தபடி 19–ந் தேதி வெளியிடப்படும். அதற்குள்ளாக மறு மதிப்பீடு, சி.டி. தேர்வுத்துறையிடம் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரேண்டம் எண் 15–ந் தேதி வெளியிடப்படுகிறது.