எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: கடந்த ஆண்டு மாணவர்களின் பங்கேற்பு இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது

சென்னையில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை அனுமதித்து சேர்க்கைக் கடிதம் அளித்தால், அது வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டதாகும் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 

        சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 
      இந்தநிலையில், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபினாத் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
 
          இந்த ஆண்டு (2015-ஆம் ஆண்டு) பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களை மட்டுமே நிகழ் கல்வியாண்டுக்கான (2015-16) எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
 ஏனெனில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு கடினமாக இருந்ததால், மிகவும் குறைவான மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. கடந்த ஆண்டில் முக்கியப் பாடங்களில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 
 இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 2,710 பேர் முழு மதிப்பெண்கள் (200-க்கு 200) பெற்றனர். ஆனால், இந்த ஆண்டு 124 மாணவர்கள்தான் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோன்று, இதர இரு பாடங்களிலும் (உயிரியல், வேதியியல்) கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான மாணவர்களே முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 பாதிப்பு ஏற்படும்: கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை, வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனுமதித்தால் நிகழ் ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதை சம வாய்ப்பு எனக் கருத முடியாது. நிகழாண்டு மாணவர்களுக்கு அநீதி இழைத்ததாக ஆகிவிடும். கடந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டுக்கும், இந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டுக்கும் வேறுபாடு உள்ளது. அவர்களை கலந்தாய்வுக்கு அனுமதித்தால், அவர்கள்தான் அதிகம் நன்மை பெற வழிவகுக்கும்.
 கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு படிப்பில் சேர்ந்து, அதை நிறுத்திவிட்டு மருத்துவக் கலந்தாய்வுக்கு வரக்கூடும். இதனால் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு அல்ல, நிகழாண்டு மாணவர்கள் அனைவருக்கும் பாதிப்பாக அமைந்துவிடும். எனவே, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வில் அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
 இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை பங்கேற்க அனுமதித்து சேர்க்கை கடிதம் அளித்தால், அது இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்படும் என உத்தரவிட்டார். மேலும் ஜூலை 8-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.