'ஹெல்மெட்'டுக்கு தனி கட்டணம்: 'பார்க்கிங்' குத்தகைதாரர் அதிரடி முடிவு

இன்னும் மூன்றே நாள்... தமிழகம் முழுவதும், சாலைகளில், எங்கு பார்த்தாலும், ஒரே, 'ஹெல்மெட் தலைகளாக'த்தான் இருக்கும்!

'ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்; அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, முழுவீச்சில் அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


வழக்கம் போல்...:

அபராதம் என்றால் கூட, வாகன ஓட்டிகள், வழக்கம்போல் அலட்சியமாக இருந்து விடுவர். ஆனால், இப்போது, எங்கே, லைசென்ஸ் பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில், அசட்டை ஆசாமிகள் கூட, இம்முறை, ஹெல்மெட்டுகளை வாங்கிவிட்டனர்.வரும், ஜூலை 1ம் தேதியில் இருந்து தமிழக சாலைகளில் எங்கு பார்த்தாலும், ஹெல்மெட் தலைகளை காணலாம். 'கெடு' நெருங்குவதால், இதுவரை ஹெல்மெட் வாங்காதவர்கள், ஹெல்மெட் கடைகளை மொய்த்து வருகின்றனர். இதனால், ஹெல்மெட் கடைகளில் வியாபாரம், சுடச் சுட ஜோராக நடந்து வருகிறது.சென்னை, அண்ணா சாலை, ஆயிரம்விளக்கு பகுதிகளில் உள்ள ஹெல்மெட் கடைகளில், ஒரு பக்கம் வியாபாரமும், மறுபக்கம், சரக்குகள், பெட்டி பெட்டியாக வந்தபடி உள்ளன. மாநிலம் முழுவதும், தற்போது, இந்த வியாபாரம் தான் அமோகமாக நடக்கிறது.
ஹெல்மெட்டுக்கும் கட்டணம்:

* இந்நிலையில், ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள, 'பார்க்கிங்' உரிமை எடுத்துள்ள ஏலதாரர்கள், டூவீலருக்கு தனியாகவும், அதில் வைக்கப்படும், ஹெல்மெட்டுக்கு தனியாகவும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
* சென்னை, சேலம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உட்பட, முக்கிய நகரங்களில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், 3,175 சைக்கிள், பைக் ஸ்டாண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இது தவிர, 1,356 தனியார் ஸ்டாண்டுகளும் செயல்படுகின்றன.
* இந்த ஸ்டாண்டுகளில், ஹெல்மெட்டுக்கு என, தனி கட்டணம் வசூலிக்க, குத்தகைதாரர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, சேலம் உள்ளிட்ட நகரங்களில், பார்க்கிங் பகுதிகளில், ஹெல்மெட்டுகளை பாதுகாப்பதற்கென, தனி, 'ரேக்'குகளையும் அமைத்து வருகின்றனர்.
* சில ஆண்டுகள் முன் வரை, நெல்லை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள, பார்க்கிங் பகுதிகளில், ஹெல்மெட்டுக்கு, ஐந்து ரூபாய் தனி கட்டணம் வசூலித்தனர்.
* தற்போது, மாநிலம் முழுவதும், இந்த வகை புது கட்டணத்தை வசூலிக்க, குத்தகைதாரர்கள் முடிவு செய்திருப்பது, இருசக்கர வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வகை வசூலை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
* மாநிலம் முழுவதும், கடந்த 2014 மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, 1.56 கோடி இருசக்கர வாகனங்கள் இருப்பதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'ஹெல்மெட்' அணிந்தால் பரிசு!

இருசக்கர வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மதுரை ஆர்.டி.ஓ.,க்கள் சிங்காரவேலு, கல்யாணகுமார், பாஸ்கரன், ஆய்வாளர்கள் மாரிப்பாண்டி, கதிர்வேல் ஆகியோர், மாவட்ட நீதிமன்றம் எதிரில், ஹெல்மெட் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.அப்போது, ஹெல்மெட் அணிந்து செல்வோரை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு லட்டு, மைசூர்பாகு, பேனா, போக்குவரத்து விதிமுறை குறித்த கையேடு ஆகியவை அடங்கிய, 'கிப்ட் பாக்சை' வழங்கினர்.