இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று தவிர்க்க தடூப்பூசி அவசியம்

பருவகால மாற்றத்தின்போது குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது "இன்ஃப்ளூயன்சா' வைரஸ் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஃப்ளூ வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்
மருத்துவர் பாலச்சந்திரன் பேசியது:
ஃப்ளூ வைரஸ் எனும் இன்ஃபுளூயன்சா வைரஸ் மூக்கு, தொண்டை, நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளைத் தாக்கும் வைரஸ் தொற்றுநோயாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை விட குழந்தைகளிடேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், 10 மாதங்களில் மட்டும் உலக அளவில் 4 முதல் 6 வயது உடைய குழந்தைகள் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் சிறுநீரகம், நுரையீரல், ரத்தமண்டலம் உள்ளிட்டவற்றை வெகுவாக பாதிக்கக் கூடியது.
தும்மல், இருமல், பேசும் போதும் காற்றுமூலம் பரவுகின்ற இந்த வைரஸ் பாதிப்பால், அதிக காய்ச்சல், தசை வலி, குளிர் நடுக்கம், களைப்பு, திடீர் தூக்கம், நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், பருவகால மாற்றத்தின் போது இந்த வைரஸ் அதிக அளவில் நோய்த் தொற்றை ஏற்படுத்துவதால், இன்ஃபுளூயன்சா வைரஸ் அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தவுடன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். வட இந்திய மாநிலங்களில் தற்போது இதன் அறிகுறிகள் தொடங்கியுள்ளன. எனவே இன்ஃபுளூயன்சா வைரஸ் தொற்றை தவிர்க்க தடுப்பூசி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார்.