இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்கள்:மன்னர் ஜவகர் தகவல்

“கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்களே சேர்ந்துள்ளனர்,” என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரி ஆண்டு விழா நிகழ்ச்சி யில், அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் 22 மாநில பல்கலை கழகங்கள், 3
மத்திய பல்கலை கழகங்கள், 26 நிகர்நிலை பல்கலை கழகங்கள் உள்ளன. இன்ஜினியரிங் படிப்புக்கென அண்ணா பல்கலை உள்ளது. இன்ஜி., கல்லுாரி எண்ணிக்கையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளது.


         தமிழகத்தை சேர்ந்த இன்ஜி., மாணவர்கள் இல்லாத இடம் இல்லை. நாசாவின் 'ஏரோ ஸ்பேஸ்' துறையில், தமிழக ஆராய்ச்சி மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்களில் 68 சதவீதம் பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். கிராமப்புற மாணவர்கள் கற்பனை திறன்மிக்கவர்களாக உள்ளதால், இன்ஜி., துறை மென்மேலும் மேம்பட்டு வருகிறது.மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடங்களை நடத்துபவர்களே ஒழுங்கான ஆசிரியர்கள். அண்ணா பல்கலையின் கீழ் உள்ள 538 கல்லுாரிகளில், 450 கல்லுாரி முதல்வராக இருப்பவர்கள், மெக்கானிக்கல் துறையை சேர்ந்தவர்கள். மெக்கானிக்கல் படித்தவர்கள் தலைமைப்பண்பும், ஆளுமைத்திறனும் அதிகம் உடையவர்கள், என்றார்.