இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம்

கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து தமிழ்நாடு இன்ஜி. மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்கும்
மாணவர்கள் இடங்களை தேர்வு செய்ததும் கல்லுாரிக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தில் முன்தொகை செலுத்த வேண்டும்.இதற்காக கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில் எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.

       கவுன்சிலிங் அரங்கில் 18 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. காலியிடங்கள் விவரத்தை அறிய மிகப்பெரிய மின்னணு திரைகள் உள்ளன.மாணவர்கள் மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக 50 பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அண்ணா பல்கலையின் மாணவர் குழு இயக்கும். அவர்கள் கல்லுாரிகளை பற்றி மாணவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டார்கள்.

கவுன்சிலிங் அரங்கிற்குள் 150 ஊழியர்கள்; 50 பேராசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் கவுன்சிலிங் பணிகளில் ஈடுபடுவர். கவுன்சிலிங் குறித்து மாணவர்களுக்கு முன்னறிவிப்பு அறிவுரை கூட்டம் நடக்கும்.கவுன்சிலிங் தினமும் எட்டு பிரிவுகளாக நடக்கும்; ஒவ்வொரு பிரிவிலும் 500 - 800 பேர் வரைகல்லுாரியை தேர்வு செய்ய முடியும்.மாணவர்களுக்கான அழைப்பு கடிதத்தில் 'பார்கோட்' வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணினி பதிவுகளில் திருத்தம் தேவைப்பட்டால் மாணவர்கள் கவுன்சிலிங்குக்கு முன் திருத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.