அறிவியல் மேதை ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.37 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் கண்டுபிடித்த சார்புக் கோட்பாடுகள் குறித்து தனது மகனுக்கு எழுதிய கடிதம் 62,500 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.37 லட்சம்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள 'புரொஃபைல்ஸ் இன் ஹிஸ்டரி' எனும் ஏல அமைப்பு ஐன்ஸ்டீன் எழுதிய 27 கடிதங்களை ஏலத்தில் விற்பனை செய்தது. அவற்றில் சார்புக் கோட்பாடு குறித்த கடிதம் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அனைத்துக் கடிதங்களும் 4,20,000 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.2 கோடி) விற்பனையாகின.

கடவுள் குறித்து மனிதனின் எண்ணங்கள் தொடர்பாக எழுதப்பட்ட இரண்டு கடிதங்களில் ஒன்று 28,125 அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார் ரூ.16 லட்சம்), மற்றொன்று 34,375 அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார் ரூ.20 லட்சம்) விற்பனையாகின.

இந்தக் கடிதங்கள் எல்லாம் தனது அடையாளத்தைத் தெரியப்படுத்த விரும்பாத ஒருவர் பல காலமாகச் சேகரித்தது என்றும், இவற்றை பல தனி நபர்கள் ஏலத்தில் எடுத்திருப்பதாகவும் மேற்கண்ட ஏல அமைப்பின் நிறுவனர் ஜோசப் மதலேனா கூறியுள்ளார்.