பி.ஆர்க். சேர்க்கை; இன்று முதல் இணையவழி பதிவு தொடக்கம்: விண்ணப்பிக்க ஜூன் 27 கடைசி

ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்)
 படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இந்தாண்டு
 விண்ணப்பிக்க இணையவழி மூலம் பதிவு 
செய்யும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் 
அறிமுகம் செய்துள்ளது. இதனால் மையங்கள் 
மூலமான விண்ணப்ப விநியோகம் இருக்காது. 
வியாழக்கிழமை (ஜூன் 18) முதல் இணையம் 
மூலம் மாணவர்கள் பதிவு செய்யலாம் 

        அண்ணா பல்கலைக்கழக துறைகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான பி.ஆர்க். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான பி.ஆர்க். சேர்க்கைக்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, புதுதில்லி கட்டடவியல் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் தேசிய கட்டடவியல் திறனறி தேர்வு 2015-இல் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பி.ஆர்க். கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்  www.annauniv.edutnea2015 என்ற இணையதளம் மூலம் வியாழக்கிழமை முதல் இணையவழி மூலம் பதிவு செய்யலாம். இணையவழி மூலம் பதிவு செய்ய ஜூன் 27 கடைசித் தேதியாகும்.
அவ்வாறு இணையத்தில் நிறைவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனுடன் மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு, தேசிய திறனறி தேர்வு மதிப்பெண் சான்றிதழ், அதற்கான தேர்வறை நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றிட்டு இணைத்து அனுப்ப வேண்டும்.

அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையையும் இணைக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு ரூ. 250 ஆகும். இந்த இணைப்புகளுடன் கூடிய பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "ஏ4' அளவிலான உரையிலிட்டு "செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை - 600 025' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 27 கடைசித் தேதியாகும். 
மேலும் விவரங்களுக்கு 044 - 22358265, 22358266, 22358267 ஆகிய தொலைபேசி எண்களில் மாணவர்கள் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.