ஜூலை 25ல் மருத்துவ நுழைவுத்தேர்வு

புதுடில்லி: முறைகேடு நடந்ததால், சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட, ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும், அனைத்திந்திய மருத்துவ மாணவர் நுழைவுத் தேர்வு, ஜூலை 25ல் நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம், நேற்று அறிவித்துள்ளது.

மொத்தம், 6.3 லட்சம் மாணவர்கள், மே மாதம் எழுதிய இந்த நுழைவுத் தேர்வில், அரியானா மாநிலத்தில் முறைகேடு நடைபெற்றதை அடுத்து, சில நாட்களுக்கு முன், தேர்வை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், மறுதேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியத்திற்கு உத்தரவிட்டது. முதலில், நான்கு வாரங்களுக்குள் தேர்வை நடத்தி முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சி.பி.எஸ்.இ.,யின் கோரிக்கையை அடுத்து, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 17க்குள் முடிவை அறிவிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, நேற்று தேர்வு தேதி மற்றும் பிற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, www.aipmt.nic.in இணையதளத்தை பார்வையிடலாம்.