எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம் :நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்

சென்னை:இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இவர்களுக்கான, 'ரேண்டம்' எண் வெளியீடு, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது.'ரேண்டம்' எண் விவரத்தை, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் வெளியிட்டனர். பின், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:விண்ணப்பித்த அனைவருக்கும், 'ரேண்டம்' எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், 'ரேண்டம்' எண் விவரம் அறியலாம்.

இந்த ஆண்டில், 20வது அரசு மருத்துவக் கல்லுாரியாக, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி இணைந்துள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,655 ஆக உயர்ந்துள்ளது.இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதம், 2,557 இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கிறது. அரசு கல்லுாரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 780 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.

வரும், 15ம் தேதி, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். முதற்கட்ட கலந்தாய்வில், சுய நிதி கல்லுாரிகளின், பி.டி.எஸ்., இடங்கள் இடம்பெறாது.இவ்வாறு, அவர் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நீண்ட காலமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் தான் நடந்து வந்தது. தற்போது, போதிய வசதிகளுடன், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி அமைந்துள்ளதால், கலந்தாய்வு இங்கு மாற்றப்பட்டுள்ளது.