ஆதார் எண் பதிவு செய்ய 118 மையங்களில் கூடுதல் கணினிகள்: ஜூலை 1-ம் தேதி முதல் அமல்

ஆதார் பதிவு செய்யும் பணிகளை விரைவுப்படுத்த ஜூலை 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 118 மையங்களில் கூடுதல் கணினிகள் அமைத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாட்டில் 522 இடங்களில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு தொழில்நுட்ப கருவிகளை பெற்று தரும் பெல் நிறுவனத்துடனான ஓராண்டு ஒப்பந்தம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு நிரந்தர மையங்கள் மூடப்படுமா அல்லது அரசு ஏற்று நடத்துமா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 522 மையங்களுள் 118 மையங்களில் கூடுதலாக கணினிகள் பொருத்தப்படவுள்ளன.
இதன் மூலம் ஆதார் பதிவு செய்யும் பணிகள் விரைவுப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேரின் தகவல்கள் ஆதாருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 கோடியே 9 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை தயார் செய்யப்பட்டுள்ளது.“தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 97.07 சதவீதம் பேர் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர். சென்னையில் 73 சதவீதம் பேரும், திருப்பூரில் 70.85 சதவீதம் பேரும் பதிவு செய்துள்ளனர். சென்னையில் 18 மையங்களில் கூடுதல் கணினிகள் வழங்கப்படுகின்றன” என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
ஆதாருக்காக பதிவு செய்ய பொதுமக்கள் பூர்த்தி செய்து கொடுக்கும் படிவங்களின் தகவல்களை கணினியில் ஏற்றிய பிறகே கை ரேகை, விழித்திரை உள்ளிட்ட பயோ மெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படும். சென்னையில் இன்னும் ஒரு லட்சம் படிவங்களின் தகவல்கள் கணினியில் ஏற்றப்படாமல் உள்ள தால் பணிகள்தாமதமாகி வருகின்றன. இதையும் விரைவுப் படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.