உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணி நியமனம் செய்ய, 1,080 உதவிப்பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், பணி நியமன உத்தரவு வழங்காததால், அவர்கள் தவித்து வருகின்றனர். காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆறு மாதங்களுக்கு முன் தேர்வுப் பணி நடந்தது. 5,400 பேரில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 1,080 பேர், உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இப்பணி முடிந்து, ஆறு மாதங்களாகியும், பணி நியமனத்திற்கான உத்தரவுகள் வழங்காததால், தேர்வு பெற்றவர்கள் தவித்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் கூறியதாவது:தேர்வு பெற்றவர்களில் பலர், தனியார் கல்லுாரியில் பணியாற்றி வந்தனர். இவர்களை, கல்லுாரி நிர்வாகம், வேலையில் இருந்து நீக்கிவிட்டதால், வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். அரசு கல்லுாரிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் வேலை பார்த்து வந்தவர்கள், நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதும், வேலையை
விட்டுவிட்டனர். பணி நியமன உத்தரவு வழங்குவது, கால தாமதமாகி வருவதால், இவர்களும் தவித்து வருகின்றனர். நடப்பாண்டில், கல்லுாரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், பணி நியமன உத்தரவுகளை, உடனே வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்