வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை

'அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது' என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்:

* வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர் சத்தும், உப்புச்சத்தும் குறையும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது. சத்துக்கள் குறையாமல் இருக்க, அதிக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்; அது, சுத்தமானதாக இருக்க வேண்டும்.

* நீர் ஆகாரம், மோர், இளநீர் குடிப்பது நல்லது. வெள்ளரி, தர்பூசணி நல்லது. நாட்டு வெல்லம் கலந்த, நன்னாரி சர்பத், மாதுளம் சர்பத், எலுமிச்சை சாறு அடிக்கடி குடிக்கலாம்.

* எலுமிச்சை சாறு தயாரிக்கும் போது, சிறிது இஞ்சி, நாட்டு வெல்லம் சேர்த்து தயாரித்து, பருகுவது நல்லது. உப்புச்சத்து மட்டுமின்றி, இரும்புச்சத்தும் கிடைப்பதால், உடலுக்கு நல்லது. இதே முறையில், கரும்பு சாறும் குடிக்கலாம்.

* வெயில் அதிகமானதால், நீர் சுளுக்கு ஏற்படும்; சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்தில் வராமலும், ரத்தம் கலந்து சிவப்பு நிறத்திலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* இரவில், புது பானையில், தண்ணீர் ஊற்றி, யானை நெருஞ்சி செடியை போட்டு வைத்து, அதிகாலையில் குடித்தால், இந்த நீர் சுளுக்கு வராது. அலட்சியம் காட்டினால், சிறுநீரில் கல் அடைப்பு ஏற்படும்; சிறுநீர் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

* இறப்பு ஏன்?: உச்சக்கட்ட வெப்ப தாக்கத்தால், மூளை நரம்புகள் வெடித்து விடுவதால் (சன் ஸ்டிரோக்), உயிர் இழப்பு ஏற்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமல்ல; கோடையில் பகல் நேரத்தில், அனைவரும் வெயிலில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் குன்றியோர் அறவே வெளியில் செல்லக்கூடாது.

* பணி நிமித்தமாகவோ, அவசரமாகவோ வெளியில் செல்ல நேர்ந்தால், தொப்பி, குடையுடன் செல்லுங்கள்; பருத்தி உடைகளை மட்டுமே அணியுங்கள். வெயிலில் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டாம்.

* வெப்ப தாக்கத்தை, எளிதாக எதிர்கொள்ளலாம்; பாதிப்பின் பிடியில் இருந்து தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.