சென்னை அரசு பள்ளியில் சேர மாணவர்கள் அச்சம்: தலைமை ஆசிரியர், கழிப்பறை, குடிநீர் இல்லை

தலைமை ஆசிரியர், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், சென்னையில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை ஒரு விண்ணப்பம் கூட யாரும் வாங்கவில்லை.


தேர்ச்சி விகிதம் குறைவு:

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில், கல்வித்துறையின் வடக்கு, தெற்கு மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சென்னை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன. அதே கட்டடத்தில், அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர் தேர்ச்சி விகிதம் மிகக்குறைவாக உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆசிரியர்கள் பணிக்கு வரவே தயங்குகின்றனர். கடந்த ஆண்டு, இப்பள்ளியில், பிளஸ் 2வில் ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதப் பதிவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. பொதுத்தேர்வு துவங்க, ஒரு வாரம் இருக்கும் வரை பாடங்கள் நடத்தவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், அவசர, அவசரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் தான் பாட, 'போர்ஷனே' துவக்கப்பட்டது. இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. பிளஸ் 2 வரையுள்ள மாணவியருக்கு தண்ணீருடன் கூடிய கழிப்பறை வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை. ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டுப் பிரிவுகளில் தேவையான உபகரணங்கள் இல்லை. பள்ளியைச் சுற்றி செடி கொடிகளுடன் புதர் மண்டிக் கிடக்கிறது.

வாங்கவில்லை:

இதனால், ஏற்கனவே படிக்கும் மாணவ, மாணவியரும், வேறு பள்ளிகளில் சேர முயற்சி மேற்கொண்டுள்ளனர். வரும் கல்வி ஆண்டில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. ஆனால், இப்பள்ளியில், இதுவரை ஒரு வகுப்புக்குக் கூட மாணவர், பெற்றோர் யாரும் வந்து விண்ணப்பம் வாங்கவில்லை. அதனால், பள்ளி அருகில் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று, பெற்றோரை சந்தித்து பேசி மாணவர்களை சேர்க்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.