சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதால் நாவல் மர குவளைக்கு மவுசு அதிகரிப்பு!

சென்னை: இயற்கை முறையில், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல் மரக் குவளைக்கு, பூம்புகார் விற்பனையகத்தில் மவுசு அதிகரித்துள்ளது.

நாகப்பழம், நாவப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நாவல் பழத்திற்கு, சங்க இலக்கியத்திலும், தெய்வ வழிபாட்டிலும் தனி இடம் உண்டு. பல கோவில்களில், நாவல் மரம் தல விருட்சமாகவும் விளங்குகிறது. நாவல் மரத்தின் பழம், இலை, மரம், பட்டை மற்றும் விதை என அனைத்துமே, அதீத மருத்துவ குணங்கள் கொண்டவை. அந்த வகையில் நாவல் மரத்தின் அடிப்பாகத்தில் தயாரிக்கப்பட்ட குவளைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த குவளையில் ஊறிய தண்ணீர், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து, காதி கிராப்ட் இயற்கை மருத்துவ மையத்தின் டாக்டர் எஸ்றா வின்சென்ட் கூறியதாவது: நாவல் பழம், நீளம், உருண்டை என இரண்டு ரகம் கொண்டது. இதில், உருண்டை ரகமே மருத்துவ குணம் உடையது. நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறு, குடற்புண் ஆற்றும். நாவல் பழத்தில் உள்ள அதே மருத்துவ குணம், மரம், வேர், விதைக்கும் உள்ளது. நாவல் மரத்தின் அடிப்பகுதியில் தயாரிக்கப்பட்ட குவளையில், குடிநீரை ஊற்றி, ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு பருகலாம் அல்லது மரக் குவளையை குடிநீர் உள்ள பாத்திரத்தில், ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு குடிநீரை பருகலாம். மேலும், தேவையான அளவு குடிநீரை, இரவு முழுவதும் மரக் குவளையில் ஊற வைத்து, காலை உணவுக்கு முன் பருகலாம். இப்படி செய்து வந்தால் நீரிழிவு நோய் குறைந்து, கட்டுப்படும்; உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்; மலச்சிக்கல், ஜீரண குறைபாடு, அதிக உடல் எடையைக் குறைக்கும்; ரத்தக் கொதிப்பு, மூட்டு வலி, அஜீரணம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும். இந்த மரக் குவளையை சர்க்கரை நோய் இல்லாதவர்களும், குழந்தைகளும் கூட பயன்படுத்தலாம். 'சைனஸ்' நோய் பாதிப்பு உள்ளவர்களும் இந்த மரக் குவளையை, சுடுநீரில் போட்டு, அந்த நீரைப் பருகலாம். ஒரு நாவல் மரக் குவளையை, இரண்டு ஆண்டுகள் உபயோகிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இவ்வளவு மகத்துவம் கொண்ட நாவல் மரக் குவளைகள், பூம்புகார் விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களிடம் இந்த குவளைக்கு மவுசு அதிகரித்து வருகிறது. ஒரு குவளையின் விலை, 450 ரூபாய்.