ஓய்வூதியதாரர்களுக்கான விதிகள் தளர்வு

சென்னை: 'ஓய்வூதியதாரர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழில், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என, அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசிடம், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 'வேலையில் இல்லை, மறு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, மறுமணம் செய்யவில்லை, திருமணமாகவில்லை' என்பது போன்ற விவரங்களை, முறையான விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். 'விண்ணப்பத்தில், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற வேண்டும்' என, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவோர், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற சிரமப்படுவதால், விண்ணப்பத்தை எளிமைப்படுத்தும்படி, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, 'ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறாமல், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என அறிவித்துள்ளது. இவ்விவரத்தை, அனைத்து ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும்படி, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனருக்கு, நிதி துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டு உள்ளார்.