தரமற்ற பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும் - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன்

மாணவர்களுக்கு தரமில்லாத கல்வியளிக்கும்
 பொறியியல் கல்லூரிகளை தயங்காமல்
மூட வேண்டும் என, அண்ணா

பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
      கல்வித் துறையில் எம்.ஆனந்தகிருஷ்ணனின் பங்களிப்புக்காக தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், எந்தக் கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது, மாணவர்கள் படிக்கும் படிப்புக்கான எதிர்கால வாய்ப்புகள் என்ன, அவர்களுக்கான உதவித் தொகைகள் என்ன என்பது குறித்து வழிகாட்டி மையங்கள் இல்லை.

அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் தேர்வாகாமல் இருப்பதற்கு, பள்ளிக் கல்வி முறையும் ஓர் முக்கிய காரணமாகும். தனியார் பள்ளிகள் பெருகிவிட்ட நிலையில், அவைகள் வெறும் பணம் பெறுவதற்கான வழியாகவே உள்ளன. மேலும், குறிக்கோள் இல்லாத பாடத் திட்டமே பள்ளி அளவில் உள்ளது. எப்படியாவது தங்கள் பிள்ளைகளை பொறியியல் படிப்பில் சேர்த்துவிட வேண்டும் என்றுதான் பெற்றோர்களும் நினைக்கின்றனர். மேலும், விளையாட்டு, இசை உள்ளிட்ட பிற துறைகளை தேர்ந்தெடுக்க பரிந்துரைப்பதும் குறைவாகவே உள்ளது.
தற்போது பொறியியல் படித்த மாணவர்கள் பெரும்பாலும் வேலை கிடைக்காமல் போவதற்கு, கல்லூரிகளும் ஓர் முக்கிய காரணமாகும். முன்பு நான் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, தமிழகத்தில் 70 பொறியியல் கல்லூரிகளுக்கு மேல் தொடங்க வேண்டாம் என தெரிவித்திருந்தேன்.
தற்போது முறையான திட்டமே இல்லாமல் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் பொறியியல் படிப்பை முடித்தாலும், அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்புக்கான கல்வியை பல கல்லூரிகள் அளிப்பதில்லை.
எனவே, தரம் இல்லாத பொறியியல் கல்லூரிகளை தயக்கமின்றி மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுமனே பாடத் திட்டத்தில் உள்ளதை மட்டும் படிக்காமல் தொழில் சார்ந்த செயல்முறை அறிவையும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். கல்விக்காக பல லட்ச ரூபாய் செலவழித்து, ரூ.5,000 சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் மாணவர்களிடம் ஏமாற்றம் மட்டுமே இருக்கும். சமூகத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.