பொது இட மாறுதல் அறிவிக்காததால் கவலை! அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படும் பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.ஆண்டுதோறும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' நடத்தப் படும். 
 
          பணி மூப்பு அடிப்படையில், தகுதியான ஆசிரியர்கள் விரும்பும் பள்ளிக்கு, இடமாறுதல் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும்போது, புதிய பள்ளியில் பணியில் சேருவர். கடந்தாண்டு ஜூன் மற்றும் ஜூலையில், இட மாறுதல் "கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால், ஆசிரியர்கள் பல விதங்களில் சிரமப்பட்டனர்.
 
               "கவுன்சிலிங்' நடந்த நாட்களில், பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு, பங்கேற்க வேண்டியிருந்தது. இட மாறுதல் கிடைத் தவர்கள், புதிய பள்ளியில் பணியில் சேர்ந்தாலும், குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டனர்.நடப்பாண்டில், மே மாதம் முடிய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், ஆசிரியர் பொது இட மாறுதல் "கவுன்சிலிங்' குறித்த அறிவிப்பு, பள்ளி கல்வித்துறையிடம் இருந்து, இதுவரை வெளியாகவில்லை. இனி வெளிவந்தாலும், ஜூன் அல்லது ஜூலை மாதங்களிலேயே, நடத்துவதற்கு அவகாசம் உள்ளது.பள்ளிகள் திறந்தபின்,"கவுன்சிலிங்' நடத்தினால், வகுப்பு நடத்துவதில் சிரமம் ஏற்படும்; குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்ப்பது, புதிதாக வாடகை வீடு பிடிப்பது என, பல சிக்கல்களை சமாளிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.