குடும்ப தலைவராக இருக்கும் பெண்களுக்குதமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு

பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.தமிழகத்தில், 2011 மக்கள்தொகை கணக்குப்படி, 7.21 கோடி பேர் உள்ளனர்; இவர்கள், 1.85 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.இதில், 1.39 சதவீத
குடும்பங்கள், பெண்களை குடும்பத் தலைவராகக் கொண்டவை என, கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கணவனால் கைவிடப்பட்டவர், விவாகரத்து ஆனவர், விதவை, திருமணம் ஆகாமல் இருப்பவர் போன்ற காரணங்களால், குடும்பத் தலைவராக பெண்கள் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

இவர்களின், வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு புதிய திட்டத்தை, அறிவித்துள்ளது.இதுகுறித்து, அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:'ஏழை மகளிரை, குடும்ப தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதார திட்டம்' என, இதற்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கிராமம் மற்றும் நகரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்கள். ஐந்து பெண்களை இணைத்து, சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.பொதுவாக, சுயவேலை வாய்ப்புக்காக, ஒன்று - மூன்று மாத பயிற்சி அளிக்கப்படும்; 18 - 45 வயதுள்ள பெண்களுக்கு, மூன்று - 12 மாத பயிற்சியும் உண்டு.சுய வேலைவாய்ப்பை உருவாக்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.

ஒரு பெண்ணுக்கு, பயிற்சி மற்றும் மானியத்துக்காக, 20,000 - 30 ஆயிரம் ரூபாய் செலவிடப்படும். நடப்பு ஆண்டில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு திட்டம் நடைமுறையில் இருக்கும் இதற்கு, 750 கோடி ரூபாய் செலவிடப்படும்.நடப்பு ஆண்டுக்கு மட்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுடன் இணைத்து, இத்திட்டமும் செயல்படுத்தப்படும். கூடுதல் நிதி தேவைப்பட்டால், மாநில அரசு அளிக்கும். பயனாளிகள் தேர்வு, பயிற்சி அளிக்க வேண்டிய, சுய வேலைவாய்ப்பு பிரிவுகளை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கமிஷன் முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.