பி.ஆர்க்., படிப்புக்கு ஜூன் முதல் வாரம் விண்ணப்பம் 'நாட்டா' தேர்வு முடிவுக்கு பல்கலை காத்திருப்பு

பி.ஆர்க்., எனப்படும் கட்டடக்கலை வல்லுனர் படிப்புக்கான விண்ணப்பங்கள், ஜூன் முதல் வாரம் அண்ணா பல்கலையில் வழங்கப்பட உள்ளன.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 580 இன்ஜினியரிங் கல்லூரிகளில், இரண்டு
லட்சத்துக்கும் மேற்பட்ட பி.இ., - பி.டெக்., இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. வரும், 29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.இந்நிலையில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில், 40 கல்லூரிகளில், பி.ஆர்க்., என்ற கட்டடக்கலை படிப்பு உள்ளது. இதில், மொத்தம், 1,750 இடங்கள் உள்ளன.இந்த, பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய கட்டடக்கலைக் கவுன்சிலான, சி.ஓ.ஏ., நடத்தும், 'நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்' (நாட்டா) என்ற தேசியக் கட்டடக்கலை நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்த பட்சம், 80 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, நாட்டா தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாக வில்லை.
இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது:பி.ஆர்க்., படிப்புக்கான நாட்டா நுழைவுத் தேர்வு முடிவு, இம்மாத இறுதிக்குள் வந்து விடும் என, எதிர்பார்க்கிறோம். முடிவு வந்ததும், பி.ஆர்க்., படிப்புக்கான விண்ணப்ப வினியோக தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். எப்படியும் ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்ப வினியோகம் துவங்கும். ஜூலை முதல் வாரத்திற்குள், கவுன்சிலிங் நடத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.-