சித்தா, ஆயுர்வேதம் படிப்புக்கு விண்ணப்பம் எப்போது: அரசு இழுத்தடிப்பால் தவிக்கும் மாணவர்கள்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இரண்டு நாட்களில் முடிய உள்ளது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 296 இடங்கள் உள்ளன. இது தவிர, 20 சுயநிதி கல்லூரிகளில் இருந்து, 994 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இதன்படி, 1,290 இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்பு கலந்தாய்வைத் தொடர்ந்து, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும், கலந்தாய்வு துவக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 'இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என, தமிழக அரசு அறிவித்தாலும், அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாததால், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டிய கடைசி மாதத்தில், கலந்தாய்வு நடத்தும் நிலை தொடர்கிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 28ம் தேதியுடன் முடிகிறது. முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 19ல் நடக்க உள்ளது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இதுவரை விண்ணப்பம் வழங்கவில்லை. 'இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர, 'கட் - ஆப்' மதிப்பெண் இருந்தும், இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என, அரை ஆண்டு காலம் காத்திருப்பது நரக வேதனை. கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், இந்த சிக்கல் தீரும்' என, மாணவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: கல்லூரிகளில், 'ஆயுஷ்' கவுன்சில் ஆய்வு முடிந்துள்ளது. முறையான அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு, ஜூலை, 14ல் விண்ணப்பம் தரப்பட்டு, அக்., மாதம் தான் கலந்தாய்வு நடந்தது. இந்த ஆண்டு, ஜூன், இரண்டாம் வாரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவை, 'ஆயுஷ்' கவுன்சில் அனுமதியைப் பொறுத்தே அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.