நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியாததுவிஞ்ஞானிகளுக்கு அறிவியல் விடுத்துள்ள சவால் : இஸ்ரோ உந்தும குழும இயக்குனர்

ராமநாதபுரம்: “நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியாதது, விஞ்ஞானிகளுக்கு அறிவியல் விடுத்துள்ள சவால்,” என்று மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி உந்தும குழும இயக்குனர் இங்கர்சால் கூறினார்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடந்த பொறியியல் மற்றும் தொழிட்நுட்ப செயல்பாடுகள் குறித்த தேசிய கருத்தரங்கை, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி உந்தும குழும இயக்குனர் இங்கர்சால் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
உயரிய தொழில்நுட்பம் உலககெங்கும் அதீத வளர்ச்சி கண்டுள்ளது. புதிய பொருளில் உள்ள இடர்பாடுகளை மென்பொருள் மூலம் களைந்து, குறுகிய காலத்தில் தயாரித்தால் தான் கண்டுபிடிப்பாளரின் எண்ணம் வெற்றியடையும். அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதர நாட்டு பொருட்களின் தயாரிப்புகளுக்கான தொழிற்கூடமாக இந்தியா உள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுகளால் இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசுபடுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
உயரிய தொழில்நுட்பங்களை பிற நாடுகளுக்கு போட்டியாக கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள், இன்ஜினியர்களை அடையாளம் கண்டு வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும். நம் நாட்டின் இயற்கை வளம், மனித வளத்தை நாமே பயன்படுத்த வேண்டும். வேற்று கிரங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் பிற நாடுகளை விட நாம் குறுகிய கால வெற்றி கண்டுள்ளோம்.
நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாதது விஞ்ஞானிகளுக்கு அறிவியல் விடுத்துள்ள மிகப்பெரிய சவால். விஞ்ஞான வளர்ச்சியில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா இணையாக உள்ளது. தொழில்நுட்பம் மட்டும் நாட்டின் வளர்ச்சி எனக்கருதி விவசாயத்தை நாம் புறக்கணித்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.