அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி அவசியம்!

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் காலம் நெருங்கி விட்டது. தங்கள் குழந்தைகள் எம்மாதிரி கல்வி பெற வேண்டும் என்பதில், அக்கறைப்படும் பெற்றோர் சதவீதம் அதிகரித்திருக்கிறது.

கல்வியில் பின்தங்கிய கிருஷ்ணகிரி, விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருகிறது. கல்வி கற்பிக்கும் நடைமுறை குறைவு, தேர்ச்சி சதவீதம் பின்னடைவு ஆகியவை, இவற்றிற்கு காரணமாகின்றன.தமிழக பட்ஜெட்டில், கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட போதும், சமீப காலமாக பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறை வசதி ஆகியவை, மக்கள் கவனத்தில் முன்னிலையில் உள்ளன.அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கிலம் கற்றுத் தரப்படாததால் மூடுவிழா என்பதும், அதில் சேர்க்கை எண்ணிக்கை குறைவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 14 வயது வரை அனைவருக்கும் கல்வி தருவது அரசின் கடமை.
கிராமப்புற பள்ளிகளில், கழிப்பறை கட்டும் திட்டம், முடுக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, அரசு பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தந்து, அப்பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உதவியுடன் இப்பணிகள் நடப்பதாக தெரிகிறது.ஆனால், ஒரு லட்சம் ரூபாயில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கழிப்பறை கட்டுவது எளிதல்ல. கூடுதல் செலவு பிடிக்கும். அதுவும், பராமரிக்கப்படாத பழைய கழிப்பறையாக இருந்தால், அதை வசதியுடன் மாற்றுவதற்கு செலவு
அதிகரிக்கும். அதற்கான கூடுதல் செலவைத் தருவது யார், கழிப்பறை கட்டுவதிலும் லஞ்சம் ஊடாடுமா, பள்ளி நாட்களில் கழிப்பறை சுத்தமாக இருக்க தண்ணீர் வசதி, பணியாளர் நியமனம் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.தனியார் பள்ளிகளில், கட்டடம் மற்றும் கழிப்பறை வசதி, அப்பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு ஏற்ப அமைகிறது என்பது பொதுவிதியாகும்.
கல்வி வசதி என்பது, மத்திய அரசின் கணிசமான நிதி உதவியுடன், மாநில அரசு
நிறைவேற்றும் திட்டம்.அடுத்த சில மாதங்களுக்குள், மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி முற்றிலும் சரியாக உள்ளதா, அதை தினமும் தூய்மையாக வைக்க வசதி உள்ளதா என்பதை, முன்னோடி திட்டமாக, கல்வித்துறை கணக்கெடுத்து கண்காணித்தால் நல்லது.
இவை, எந்த அளவு அரசு பணத்தில் சீராகி இருக்கின்றன என்பதை, மக்களுக்கு சில மாதங்களில் தெரிவிக்கலாம். தமிழகத்தில், பிளஸ் 2 வரை தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் நிலையில், சிறுவர், சிறுமியர் அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான சூழ்நிலையில், கல்வி கற்க வசதிகள் செய்வது அரசின் கடமை.