மொபைல் பயன்பாடு: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை தடை

எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் ஜூன் 1ம் தேதியே, எல்லா இலவச பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்கி விட வேண்டும். அன்றே பள்ளிகள் முழு அளவில் செயல்பட வேண்டும்.

* ஆசிரியர்களுக்கான பணிக் கால அட்டவணையை கொடுப்பதுடன், அவர்கள் காலதாமதாக வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கட்டமைப்பு வசதி, குடிநீர் தொட்டி, கழிப்பறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளி மைதானம் உள்ளிட்ட எல்லா பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. இதை, தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

* மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் சார்ந்த கருத்துக்களை சொல்லித் தர வேண்டும். ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்குவது தான், ஆசிரியரின் முழு முதற்கடமை.

* இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு, தினமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு பயிற்சி அளிப்பதுடன், முதல் ஒரு மாதம் வாசிப்பது, எழுதுவது போன்ற பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.

* பாடம் சொல்லி கொடுப்பதுடன், விளையாட்டு, சமூக சேவை, கணித ஆய்வகம் உள்ளிட்ட செயல்பாடுகளிலும், மாணவர்களை ஈடுபடுத்தி, அவர்களின் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

* மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள் தினமும் கண்காணித்து, தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை பற்றி தலைமை ஆசிரியருக்கு சொல்ல வேண்டும். அந்த மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பாட வேளையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் இல்லாத நிலை இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் இல்லாமல் எந்த வகுப்பறையும் காலியாக இல்லாத நிலையை, தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

* தலைமை ஆசிரியர்கள் தினமும் குறைந்தது, இரண்டு பாட வேளைகளில் வகுப்புகளை மேற்பார்வை செய்து, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.