மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே நேர்முக தேர்வு நடத்த வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பணிக்காக நடத்தப்படும் எழுத்து தேர்வில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே, நேர்முக தேர்வு நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வெளியிடவில்லை

தமிழக தொழில்துறையின் உதவி என்ஜினீயர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல், சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

அந்த பட்டியலில் எங்கள் பெயர் இருந்தது. இதன்பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் கலந்துகொண்டவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரங்களை வெளியிடவில்லை. ஆனால், 82 பேரை மட்டும் நேர்முக தேர்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

வழக்கு தோல்வி

இதில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 80 பேருடைய மதிப்பெண் விவரங்களை மட்டும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. எனவே, தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு விசாரணையின்போது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல், எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்தார். அதில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் எடுத்திருந்தனர். அதை மனுதாரர் வக்கீல்களும் ஒப்புக்கொண்டார். எனவே, இந்த வழக்கு தோல்வியடைந்துவிட்டது.

சந்தேகம் ஏற்படுகிறது

அதே நேரம், டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டுள்ள இந்த தேர்வு நடைமுறை அதிருப்தி அளிக்கிறது. பொதுவாக எழுத்து தேர்வு முடிந்த பின்னர், அந்த தேர்வின் மதிப்பெண் விவர பட்டியல்களை முதலில் வெளியிட வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குருப்-4 தேர்வில் அதிக நபர்கள் எழுத்து தேர்வில் கலந்துகொள்கிறார்கள். அந்த குருப்-4 எழுத்து தேர்வின் மதிப்பெண் விவரங்களை வெளியிடும்போது, உதவி என்ஜினீயர் பதவிக்கு குறைவான எண்ணிக்கையில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிடாதது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தேர்வில் கலந்துகொண்டவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கையின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதனால், அவர்கள் இந்த கோர்ட்டின் கதவினை தட்டுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும் என்றால், டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

தேவையற்றது

எனவே, இனிவரும் காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எழுத்து தேர்வினை நடத்தினால், அந்த தேர்வின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே, நேர்முக தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மேலும், நேர்முக தேர்வு நடத்துவதற்கு முன்பு சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தேவையற்றது. சான்றிதழ் சரிப்பார்க்கும் பணி தேர்வின் இறுதி கட்டத்தில்தான் மேற்கொள்ள வேண்டும். எனவே உதவி என்ஜினீயர் பதவிக்கு எழுத்து தேர்வு எழுதிய அனைவரது மதிப்பெண் விவரங்களையும் உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.