தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனால், சாதாரண, ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் படித்தால், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண் கிடைக்காவிட்டால் பொறியியல், மருத்துவம், சி.ஏ., மற்றும் முன்னணி அறிவியல் பாடப் பிரிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. இதனால், சமூக அளவில் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம், மிக மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் மாணவர்கள் முன்னணி இடத்துக்கு வராதது, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பல வகையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், தற்போதைய நிலைமையை சமாளிக்க, அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வர, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தேர்ச்சி குறைவு மற்றும் மதிப்பெண் குறைந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள், பள்ளிகள் பட்டியல்களை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மோசமான செயல்பாடுகள் உறுதி செய்யப்படும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை இடமாற்றவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.