அரசு ஊழியர் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை அறிமுகம்

சென்னை:அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பாஸ்போர்ட் மண்டல அலுவலக அறிக்கை:பொதுத் துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பாஸ்போர்ட் பெற, அரசின் தடையின்மை
சான்றிதழை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஆனால், சில அரசு அலுவலகங்களில், தடையின்மை சான்று பெற, நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் நெருக்கடி நிலவுகிறது.

இதை கருத்தில் கொண்டு, 'அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, தடையின்மை சான்றிதழ் தேவையில்லை' என, வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதற்கு மாற்றாக, தடையின்மை சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது குறித்து, படிவம், '௪' மூலம் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.

அதன் நகலை, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால், போலீஸ் அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். ஊழியர் அளிக்கும் முன்னறிவிப்பு பற்றி, அரசு அதிகாரிக்கு ஆட்சேபனை இருந்தால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, நேரில் சென்று தெரிவிக்கலாம்.பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய படிவங்களை, பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.