பாஸ் ஃபெயில் என்ற முறை வேண்டாமே

பாஸ் ஃபெயில் என்ற முறை வேண்டாமே
அச்சம் என்பது மடமையடா என்பதற்கேற்ப குழந்தைகளை பயம் அறியாமலும், பயம் இல்லாமலும் வளர்க்க வேண்டும். ஆனால் அவர்களை பயமுறுத்தும்படி அமைவதுதான் தேர்வு. காரணம் பாஸ், ஃபெயில் என்ற முறைதான் அந்த பயத்தை ஏற்படுத்துகிறது.

மாணவர்களின் திறனை சோதித்து அதற்கேற்ப மதிப்பெண்களை வழங்குவது நியாம்தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக இத்தணை மதிப்பெண்கள் பெற்றவர்கள் பாஸ், இத்தனை மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஃபெயில் என்று சொல்வதுதான் வேண்டாம் என்கிறோம். தற்போதுள்ள தேர்வு முறையானது மாணவர்களுக்கு எந்த அளவுக்கு மனப்பாடம் செய்யும் திறன் உள்ளது என்பதை மட்டும்தான் சோதித்து அதற்கேற்ப மதிப்பெண் வழங்கும்படியாக உள்ளது. இது நியாயமா? இந்த ஒரு திறனை மட்டும் வைத்து மதிப்பெண் வழங்குவது ஏற்புடையதா? அதை உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன். இவ்விவகாரத்தை ஒரு கல்வியாளர்கள் குழு அமைத்து ஆராய்ந்து முடிவு எடுக்கட்டும். நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் நம்ம விஷயத்திற்கு வருவோம்.
நாம் வலியுத்த வருவது குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால்தான் பாஸ் இல்லையென்றால் ஃபெயில் என்ற முறை மாற வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு கொள்திறன் உள்ளது. அது அவனுடைய முழு திறனாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அவர்களை இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் பாஸ் என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும். அவர்கள் எவ்வளவு திறனுக்கு எழுதியிருக்கிறார்களோ அவ்வளவுக்கு மட்டும் மதிப்பெண் கொடுங்கள். அதை விட்டுவிட்டு நீ இத்தனை மார்க் எடுத்தால்தான் பாஸ் என்ற கட்டுப்பாடு மட்டும் வேண்டாம், தேவையற்றதும் கூட. தேர்வு எழுதிய எல்லோருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பாஸ் பண்ணவங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும், ஃபெயில் ஆனவர்களுக்கு இல்லை என்று இல்லையே. அப்புறம் ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும். மதிப்பெண்கள் மட்டும் தான் எதிர்காலம் அல்ல. அவரவர் திறனுக்கேற்ப எதிர்காலம் சிறப்பாக அமையப்போகிறது.
ஒவ்வொரு படிப்புக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளலாம் அதில் மாற்றுக் கருத்தில்லை. அப்போதும் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சிறப்பான உயர்கல்வி அமையும். குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அவரவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில் உயர்கல்வி அமையப்போகிறது அவ்வளவுதான் வித்தியாசம். இதுதானே இப்போதும் உள்ளது இதில் என்ன புதியதாக இருக்கிறது எனக் கேட்கலாம். ஃபெயில் இல்லை என்பதுதான் அந்த புதிய விஷயம். பாஸ், பெயில் இல்லை என்பதால் தேர்வு பயம் இருக்காது, உயர்கல்வி இடைநிற்றல் இருக்காது, மன அழுத்தம் இருக்காது, ஆசிரியர்களுக்கும் நெருக்கடிகள் இருக்காது, ரிலாக்ஸாக எழுதுவார்கள். இவ்விவகாரம் சிலருக்கு ஆக்கப்பூர்வமாகவும் அமையலாம், சிலருக்கு அலட்சியமாகவும் அமையலாம். அதற்காக அவர்களை உதாசினப்படுத்தக்கூடாது. அவர்களின் இயல்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் திறனை அங்கீகரிக்க வேண்டும்.
உங்களிடம் ஒரு கேள்வி. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று எதற்காக அரசு சட்டம் கொண்டு வந்தது இடைநிற்றல் இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே. தற்போதைய சூழலில் தொடக்கக்கல்வியில் இடைநிற்றல் இல்லை. ஆனால் உயர்கல்வியில் இடைநிற்றல் அதிகமாக இருக்கிறதே. தொடக்கக்கல்வி பயின்ற அனைவருமே உயர்கல்வி பயில்கிறார்களா? இல்லையே, இதற்கு என்ன செய்வது. அதை ஏன் விரிவுப்படுத்தக்கூடாது. எல்லா படிப்புகளுக்கும் ஆல் பாஸ் என்று சொல்லிப்பாருங்கள் இடைநிற்றலே இருக்காது. அப்புறம் எப்படி வேலை கொடுக்கிறது என்று கேட்கலாம். அதையும் மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது கல்வியாளர்களின் ஆராய்வின்  முடிவின் அடிப்படையிலோ கொடுக்கலாம். ஒன்னு ஒன்றாம் வகுப்பு முதல் பாஸ் ஃபெயில் வையுங்க. இல்ல கடைசி வரைக்கும் ஆல் பாஸ் வையுங்க. சிறு வயதில் ஆல் பாஸ்னு பழக்கிப்புட்டு திடீர்னு ஃபெயில் மெத்தெட் சொல்லி அவனை ஏன் குழப்பனும். நீங்களே சொல்லுங்க?
அடுத்தாக ஒரு பெரிய பிரச்சனைத் தீரும். அதான்ங்க மன அழுத்தம், இடைநிற்றல், அதிகாரிகளின் கெடுபிடி, ஆசிரியர்களின் நெருக்கடி, தற்கொலைகள் போன்ற பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உண்மையா? இல்லையாங்க? நீங்களே சொல்லுங்க.
கல்வி என்பது இயல்பாக இருக்க வேண்டும். கட்டாயமாக இருக்கக்கூடாது. கல்வி என்பது என்னாங்க? தொடர்ச்சியாக அறிந்து கொள்வது, அறிவை வளர்த்துக்கொள்வது, வாழ்க்கையை பண்படுத்திக்கொள்வது அதன் மூலம் பொருளாதார ரீதியில் வாழ்க்கையை உயர்த்திக்கொள்வது இன்னும் வேறு ஏதேனும் இருக்கலாம் அவ்வளவுதானேங்க. இது இயல்பாக அமையுனுங்க. கட்டாயம் இருக்கக்கூடாதுங்க.
அப்புறம் ஒரு முக்கியமான விஷமுங்க. உளவியல் அறிஞர்கள் என்ன சொல்றாங்க, குழந்தைகளை யாருடனும் ஒப்பிடக்கூடாதுனு சொல்றாங்களேங்க. அப்படி இருக்கையில் தேர்வு முடிவு வந்தவுடன் முதல் வேளை இந்த மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இதலாம் தேவையாங்க. அவரவர் திறனை ஏன் மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டும். உளவியல் ரீதியாக தவறுதானேங்க. இது சிலருக்கு மகிழ்ச்சியைத் தரலாம். பலருக்கு வேதனையைத்தானேங்க தரும்.
இறுதியாக ஒரே ஒரு கருத்துடன் முடித்துக்கொள்வோம். இதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள் நல்ல உயர்கல்வி பயின்று சமூகத்தில் உயர்ந்த பதவியைப்பெற்று சிறப்பாக வாழ்வார்கள். ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதற்கு தகுந்தாற்போல் உயர்கல்வி பயின்று சிறப்பானதொரு பணியினைப்பெற்று சிறப்பாக வாழ்வார்கள். பள்ளிப்படிப்பை விட்டவர்கள் உயர்கல்வி பயிலாமல் ஏதேனும் தொழிலைக் கற்றுக்கொண்டு சமுதாயத்தில் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள். இறுதியில்  சமுதாயத்தில் அனைவருமே ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் சமூக வளர்ச்சிக்கு உதவுவார்கள். ஆக, எல்லோருமே சமுதாயத்தில் நல்ல நிலையைத்தான் அடையப்போகிறார்கள். யாருடைய வாழ்க்கையும் வீணாகப்போவதில்லை. அப்புறம் ஏன் இந்த பாஸ் , ஃபெயில் என்ற பிரித்தாளும் கொள்கை.
மனஅழுத்தம் இல்லாத, தற்கொலைகள் இல்லாத, நெருக்கடிகள் இல்லாத, ஒப்பீடு இல்லாத, பயம் இல்லாத, பாஸ் ஃபெயில் இல்லாத, இயல்பான ஒரு கல்வி முறையை உருவாக்குவோம். இயல்பான சமுதாயத்தை உருவாக்குவோம். அவரவர் எடுக்கும் மதிப்பெண்ணை அங்கீகரிப்போம், ஏற்றுக்கொள்வோம். அவரவர் விரும்பும் வாழ்க்கையை அமைத்துகொடுக்க வழிகாட்டுவோம். சுதந்திரமான ஒரு தலைமுறையை உருவாக்குவோம். நன்றி வணக்கம்.
தயவுசெய்து இந்த கருத்தை தாங்கள் அனைவரும் நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும். தவறாமல் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். உங்களின் பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

கோபிநாதன், மயிலாடுதுறை.