கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?

கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி? அண்ணா பல்கலையின் சேர்க்கை பிரிவு இயக்குனர் விளக்கம்
பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்று, எவ்வாறு கல்லுாரிகளை தேர்வுசெய்வது என்பது குறித்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜன் விளக்கம் அளித்
தார்.அவர் பேசியதாவது:
பொறியியல் விண்ணப்பத்துடன் உள்ள கோடிங் ஷீட்டை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதில் கண்டிப்பாக கிறுக்கவோ; அதை மடிக்கவோ கூடாது. விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ்; வருமான சான்றிதழ்; 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, தமிழகத்தை தவிர வேறு மாநிலத்தில் படித்திருந்தால், நேட்டிவிட்டி சான்றிதழ்; மாற்றுத்திறனாளியாக ருந்தால், அதற்கான சான்றிதழ்; முதல் பட்டதாரியாக இருந்தால், அதற்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.எந்தவிதமான அசல் சான்றிதழையும் விண்ணப்பத்துடன் அனுப்பக் கூடாது. l அழைப்புக் கடிதம் வராவிட்டால், யாரும் கவலைப்பட வேண்டாம். நாளிதழ்களிலோ அல்லது அண்ணா பல்கலையின் இணையதளத்திலோ, உங்கள் 'கட் - ஆப்' மதிப்பெண்களுக்கு, என்றைக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளதோ, அன்று நேராக வந்துகவுன்சிலிங்கில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 
கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு இரண்டு மணிநேரம் முன்னதாக வந்து, மாற்று அழைப்பு கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம்.தவிர்க்க முடியாத காரணங்களால், கவுன்சிலிங்கிற்கு மாணவர் வர முடியாமல் போனால், அவர்களது உறவினர் அல்லது நண்பரை கவுன்சிலிங்கிற்கு அனுப்பலாம். ஆனால், மாணவரின் ஒப்புதல் கடிதம் மூலம் மட்டுமே கவுன்சிலிங்கில் உறவினர்கள்அல்லது நண்பர்கள் கலந்து கொள்ள முடியும். தவிர்க்க முடியாத காரணங்களால், யாருமே கவுன்சிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், மீண்டும் கவுன்சிலிங் நடைபெறும் நாளன்று, காலியாக உள்ள கல்லுாரிகளின் பெயர் பட்டியல்மட்டுமே மாணவருக்கு காண்பிக்கப்படும். கவுன்சிலிங்கிற்கு பெற்றோருடன் மாணவர்கள் வரும்பொழுது, சில கல்லுாரியின் முகவர்கள் வந்து உங்களை குழப்புவார்கள். 
தங்கள் கல்லுாரியை பற்றி சிறப்பாக கூறுவார்கள். அதுபோல உங்களை நாடுபவர்களை நம்பாதீர்கள்.பொதுப்பிரிவு 5,000 ரூபாயையும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.டி., ஆகிய பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 1,000 ரூபாயை பணமாகவோ அல்லது டி.டி.,யாகவோ கொண்டு வர வேண்டும். விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான கோட்டாவிற்கு, தனியாக கவுன்சிலிங் நடைபெறும். இந்த பிரிவில் கலந்து கொள்ளும் மாணவர்கள், இரண்டு பிரிவிலும் கல்லுாரி இடங்களை தேர்வு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.