எஸ்.ஐ., தேர்வு வினாக்கள் எளிமை: பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ., தேர்வில் உளவியலில் சில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்ததால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எஸ்.ஐ., நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. எப்போதும் கடினமாக இருக்கும் 'உளவியல்' வினாக்கள், இம்முறை எளிதாக இருந்தன.


         கணிதப் பகுதியும் எளிதாக இருந்தது. பொது அறிவு பகுதியில் மட்டும் சற்று கடினமான வினாக்கள் இருந்தன. 'உலக வர்த்தக மையம், ஆர்.பி.ஐ., துவக்கப்பட்ட ஆண்டு', 'சுய மரியாதை இயக்கம்' உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இருந்தன. 'எஸ்.ஐ., தேர்வு என்பதால் கடினமாக இருக்கும் என விடிய, விடிய படித்துச் சென்றோம். ஆனால் போலீஸ் தேர்வுக்கான வினாக்கள் போல எளிதாக இருந்தன' என பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வை தென்மண்டல ஐ.ஜி., அபய்குமார் சிங் பார்வையிட்டார்.
கூம்பு வடிவ குழாய்; ஐ.ஜி., கண்டிப்பு:
விழாக்கள், விசேஷங்களுக்கு கூம்பு வடிவ குழாய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் விழா, எதிர்க்கட்சிகள் பொதுக் கூட்டங்களில் இதை பயன்படுத்தினால், போலீசார் இவற்றை உடனடியாக அகற்றி பறிமுதல் செய்வர். ஆனால் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்லூரியில் மரத்துக்கு மரம் கூம்பு வடிவ குழாய்களை போலீசாரே கட்டி இருந்தனர். இதைப் பார்த்த ஐ.ஜி., 'போலீசாருக்கு மட்டும் இது விதிவிலக்கா' என கடிந்தார்.