நிலநடுக்கத்தை முன்னரே கண்டறியலாம்

"நிலநடுக்கம்' பெயருக்கு ஏற்பவே மக்களை "நடு நடுங்க' வைத்து விடுகிறது. நிலநடுக்கம் வருவதை தடுக்க முடியாதது. ஆனால் அது வருவதை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை செய்யலாம். இதற்கான கருவியை முதற்கட்டமாக இமயமலையை
ஒட்டியுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இக்கருவி ஏற்கனவே ஜப்பான், சீனா, தைவான், துருக்கி, மெக்சிகோ போன்ற நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் இது அதிகபட்சம் 1 முதல் 2 நிமிடம் மட்டுமே முன்கூட்டி எச்சரிக்கலாம். இந்த நேரம் குறைவு என்றாலும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம்.


1) நிலநடுக்கம் பூமிக்கு அடியில் உருவாகி மேற்பரப்புக்கு வரும் வரை 3 விதங்களை கடக்கிறது. முதலில் "பி அலைகள்' என்ற முதல் நிலை அலை உருவாகிறது. பின் எஸ் அலைகள்' என்ற 2ம் நிலை அலை உருவாகிறது. இதன் பின் "ஆர் அலைகள்' என்ற புவி மேற்பரப்பு அலைகள் உருவாகின்றன. "பி அலை' வினாடிக்கு 6 கி.மீ., திசைவேகத்தில் பயணிக்கிறது. "எஸ் அலை' வினாடிக்கு 3 கி.மீ., திசைவேகத்தில் பயணிக்கிறது. உதாரணத்துக்கு உத்தரகண்ட்டின் சமோலி என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறது எனில், 300 கி.மீ., தூரத்தில் உள்ள டில்லியை வந்தடைய 90 வினாடிகள் ஆகும். இதற்குள் இக்கருவி மூலம் மக்களை எச்சரிக்கை செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வைக்கலாம்.

2) "பி அலைகள்' உருவாகியுடன் சென்சார் கருவிகள் அதை பதிவு செய்து, நிலநடுக்க கண்காணிப்பு மையத்துக்குதகவல் அனுப்பும். நிலநடுக்கம் ஏற்பட இருக்கும் இடம் மற்றும் அதன் அளவு ஆகிய தகவல்களையும் அளிக்கும்.

3) இந்த தகவல் உடனடியாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்போனுக்கு பரிமாற்றம் செய்யப்படும். எந்த பகுதிக்கு எத்தனை மணிக்கு வரும் என்பதையும் தெரிவித்து விடுகிறது.