'மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு தேவை'

சென்னை: தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில், கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என, தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளை விட, 13 சதவீதம் அளவுக்கு குறைவாகத் தேர்ச்சி பெற்றன. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில், இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் விவாதித்தனர்.

பின், சங்கத்தின் தீர்மானங்கள் குறித்து பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழக அரசின், 14 வகை இலவச திட்டங்களை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே கவனிக்க வேண்டி உள்ளது. கல்விப் பணிகளுக்கு போதிய நேரம் இல்லை. எனவே, இலவசத் திட்டங்களைக் கவனிக்க பள்ளிகளில் தனி அலுவலர் நியமிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், முழுமையான தேர்ச்சி பெறவும், போட்டித் தேர்வுகளில் சிறந்த இடத்தைப் பெறவும், கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் முழுமையான தேர்ச்சி பெறும் வகையில், அரசின் பொதுத் தேர்வுகளை நடத்த உரிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை, அப்பள்ளிகளின் விருப்பத்திற்கு விடாமல் வரைமுறைப்படுத்தி, கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.