மருத்துவ கல்லூரி தலைவர் ராதாகிருஷ்ணன் கைது: சி.எம்.டி.ஏ., பெயரில் போலி ஆவண மோசடி அம்பலம்

பாலிடெக்னிக் கல்லூரி கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., திட்ட அனுமதி சான்று தந்து விட்டதாக, இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலில், போலி ஆவணம் தாக்கல் செய்து மோசடி செய்த வழக்கில், ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவியும், அறக்கட்டளையின் தலைவருமான கோமதி, மேலாளர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 1983ல், ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையை துவக்கினார்.

கல்லூரிகள்:

தெலுங்கு பேசும் மக்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், சிறுபான்மையினருக்காக, 1983ல், மீனாட்சி பாலிடெக்னிக் கல்லூரியை துவக்கினார். கடந்த, 1985ல் அருள்மிகு மீனாட்சி அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி; 1990ல், மதுரவாயலில், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவ கல்லூரி; 2003ல் மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என, அடுத்தடுத்து கல்வி நிறுவனங்களை தொடங்கினார். கடந்த, 2008ல், மாங்காடு அடுத்த, சிக்கராயபுரம் கிராமத்தில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்காக பிரம்மாண்ட வளாகத்தை கட்டினார்.

போலி ஆவணம்:

இந்த கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்காக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், இந்திய மருத்துவ கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கு, அறக்கட்டளை நிர்வாகம் விண்ணப்பித்தது. இதில், கல்லூரி கட்டடங்களுக்கு, 2008ல், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்ததாக சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்கள் போலியானவை என தெரிய வந்த நிலையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ., அறிவுறுத்தியது. சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். துணை கமிஷனர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், அறங்காவலர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவியும் அறக்கட்டளை தலைவருமான கோமதி, மேலாளர் மனோகரன் ஆகியோர், சிக்கராயபுரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது, போலி ஆவணங்களை தாக்கல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். இந்திய மருத்துவ கவுன்சிலில், ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கட்டடம் தொடர்பாக, மூவரும் போலி ஆவணம் தாக்கல் செய்த வழக்கில், அடுத்தடுத்து கைது செய்யப்படுவர் என, போலீசார் தெரிவித்தனர்.

வரன்முறை செய்த அதிகாரிகளுக்கு...? சிக்கராயபுரம் கிராமத்தில், சி.எம்.டி.ஏ., பெயரில் போலி ஆவணங்களை பயன்படுத்திய அறக்கட்டளை நிர்வாகிகள், கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த வளாகத்தில் உள்ள கட்டடங்களை, நகரமைப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வீட்டுவசதித் துறை முடிவு செய்து, இதற்கான அரசாணையை, மார்ச், 25ம் தேதி வீட்டுவசதி துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்தார். இதன்பின், அந்த கல்லூரி வளாகம் அமைந்துள்ள நீர் வழித்தடங்களை நிறுவன பயன்பாட்டு நிலங்களாக மாற்ற, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கு உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு கடும் அதிருப்தியை தெரிவித்தது. சி.எம்.டி.ஏ., பெயரில் போலி ஆவணம் தாக்கல் செய்த அறக்கட்டளையின் கட்டடங்களை, அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வரன்முறை செய்ததில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என, கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.