இன்று 'டான்செட்' நுழைவுத்தேர்வு துவக்கம்: 85 மையங்களில் நடக்கிறது

எம்.இ., - எம்.பி.ஏ., உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான, 'டான்செட்' நுழைவுத்தேர்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் 42 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரிகள், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் போன்ற மேற்படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இதற்கு, தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்ற 'டான்செட்' தேர்வு அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது. இத்தேர்வு இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும், 85 மையங்களில் நடக்கிறது. சென்னையில், எட்டு மையங்களில் தேர்வு நடக்கும். தமிழகம் முழுவதும் மொத்தம், 41,979 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 13,136 பேர்; குறைந்தபட்சமாக, காரைக்குடியில், 852 பேர் பதிவு செய்துள்ளனர். எம்.இ., படிப்பிற்கு, 19,361; எம்.பி.ஏ.,வுக்கு, 18,451; எம்.சி.ஏ.,வுக்கு 7,158 பேர் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு எம்.சி.ஏ., படிக்க விரும்பியோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.