ஒரே பெயரில் 460 கல்லூரிகள்: பட்டியல் வெளியிட்டது அண்ணா பல்கலை

மாணவர்களைக் குழப்பும் விதமாக, ஒரே பெயர் கொண்டுள்ள, 460 கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. கவுன்சிலிங்கின் போது, கல்லூரிகளின் பெயரை விட, கல்லூரிக் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், பொறியியல் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தனியார் சுயநிதிப் பல்கலைகள் தவிர, 570 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பின் கீழ் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், ஜூன் 28ம் தேதி முதல், கவுன்சிலிங் துவங்குகிறது; ஜூலை, 1ம் தேதி பொது கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில், உயர்தர வரிசையிலுள்ள கல்லூரிகளைப் போன்று, பல கல்லூரிகளுக்கு பெயர் வைத்துள்ளனர். இதனால், கவுன்சிலிங்கின் போது மாணவர்கள், தரமற்ற அல்லது ஒரே பெயரிலுள்ள, வேறு கல்லூரியை குழப்பத்தில் தேர்வு செய்து, சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, ஒரே பெயரிலான கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை தனியாக வெளியிட்டு உள்ளது; இதில், 460 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. பெரும்பாலான கல்லூரிகளின் பெயர்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன; அதனால், கல்லூரிகளின் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.