25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு

அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின்
ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். 'அரசின் உத்தரவு செல்லும்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா சமீபத்தில் அனுப்பிய கடிதம் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் மெட்ரிக் இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.'கடந்த 2011 நவம்பர் முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் 2016 நவம்பருக்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆசிரியர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'டெட்' தேர்ச்சி பெறாமல் அரசு பள்ளிகளில் சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே உள்ளனர்.
ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பட்டப் படிப்பு மட்டும் படித்து விட்டு 2011க்குப் பின் பணியில் சேர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியராகத் தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விரைவில் 'டெட்' தேர்வை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவிப்பு படி 'டெட்' தேர்வுக்கு 10 வாய்ப்புகள் தர வேண்டும் அல்லது ஐந்து
ஆண்டுகளில் முடிக்க வேண்டும்.ஆனால் அரசு இதுவரை ஒரே ஒரு 'டெட்' தேர்வை நடத்தி விட்டு மவுனமாக இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரு முறையாவது 'டெட்' தேர்வு நடத்த வேண்டும் என்றார்.